பொதுமக்களின் எதிர்ப்பை மீறி 8 வழிச் சாலைக்கு சேலம் மாவட்டத்தில் நிலம் அளவீடு நிறைவு

சேலம்: பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை மீறி சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் அளவீடு செய்து முட்டுக்கல் நடப்பட்டுள்ளது. சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை 10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியே இச்சாலை செல்கிறது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், கிருஷ்ணகிரியில் 2 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என மொத்தம் 277 கிலோ மீட்டருக்கு புதிய 8 வழி சாலை அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக முதலில் சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.

கடந்த 18ம் தேதி முதல் நேற்று முன்தினம் (23ம் தேதி) வரை 27 கிலோ மீட்டருக்கு நிலத்தினை அளவீடு செய்து, முட்டுக்கல் நட்டுள்ளனர். சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாயில் தொடங்கி, நாழிக்கல்பட்டி வரை (27 கி.மீ. தூரம்) இப்பணியை முடித்துள்ளனர். இவ்விடங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கிடையே அளவீடு மற்றும் முட்டுக்கல் நடுவதை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை நடத்தியுள்ளனர்.இதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் தாலுகாவில் உள்ள தாம்பல், தீர்த்தமலை, எம்.தாதம்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, காளிபேட்டை, கோம்பூர் கணவாய் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அளவீடு பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அங்கும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் மட்டும் அளவீடு பணி நடைபெறாமல் உள்ளன. சேலம் மாவட்டத்தில் மீதியுள்ள 9 கி.மீ., தூரத்தில் வனத்துறைக்கு சொந்தமான மலைப்பகுதி 5 கி.மீ., தூரம் வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தப்பின் அப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

மற்றபடி இறுதி பகுதியான பாரப்பட்டி, பூலாவரி, உத்தமசோழபுரம் வரையுள்ள 4 கி.மீ., தூரம் அளவீடும் பணி இன்று நடந்தது.இதில், டிடிவி தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம், தற்போதைய அதிமுக எம்எல்ஏ விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோரது நிலங்களும் அளவீடு செய்யப்படுவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்க, சேலம் மாநகர துணை கமிஷனர் சுப்புலட்சுமி, 4 உதவி கமிஷனர்கள், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம், தர்மபுரியை தொடர்ந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நில அளவீடு பணி தொடங்க இருக்கிறது. அங்கும் விவசாயி எதிர்ப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், போலீஸ் பாதுகாப்புடன் நிலங்களை அளக்க அந்தந்த மாவட்ட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: