மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து செல்லதுரையை நீக்கிய நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செல்லதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. அவருடைய தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, துணை வேந்தர் செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் அந்தோணிராஜ் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். முதலில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் செல்லதுரையின் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செல்லதுரை மேல்முறையீடு செய்தார். அதில் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும்படி கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் அப்துல் நசீர், இந்து மல்கோத்ரா அறிவித்திருந்தனர். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து செல்லதுரையை நீக்கிய நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: