ஊட்டி :நீலகிாி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில் தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை உறைபனி காலமாகும். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விாித்து போல் காணப்படும். இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயல் போன்றவைகளால் நவம்பரில் துவக்க வேண்டிய உறை பனிப்பொழிவு தள்ளி போய், டிசம்பர் இறுதியில் இருந்து உறை பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உறை பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உறைப்பனி பொழிவு காரணமாக தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டுகிறது.மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உறை பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. புற்கள், செடி கொடிகள் கருக துவங்கியுள்ளன. கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளால் தேயிலை செடிகள் இலைகள் வளர்ச்சியடைந்து வந்த நிலையில், உறைபனியால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை செடிகள் கருகி வருகின்றன.நடுவட்டம்,சோலூர்,ஊட்டி,கரும்பாலம்,சேலாஸ்,காட்டேரி,எல்லநள்ளி,மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் கருக துவங்கியுள்ளன.இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் விவசாயிகள் தங்கள் தேயிலை தோட்டங்களில் செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதேபோல் சில தாழ்வான பகுதிகளில் காய்கறி தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகளும் கருக துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அதிகரிக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்….
The post உறை பனிப்பொழிவு தீவிரம் கருகி வரும் தேயிலை செடிகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.