அய்யலூர் : சென்னையில் இருந்து சபரிமலைக்கு 700 கிமீ பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அய்யலூரில் மக்கள் வரவேற்பு அளித்தனர். சென்னை, ஐ.சி.எப் காலனியை சேர்ந்தவர் தீனதயாளன் (68). இவர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குழுவினர்களான அருணாச்சலம், சிவராமன், வேணுகோபால், ஜெயராம், வெற்றிச்செல்வன், விஷால், சண்முகம், கோவிந்தராஜ் ஆகியோருடன், சென்னையில் இருந்து சபரிமலைக்கு யாத்திரையாக சென்றனர். நேற்று முன்தினம் அய்யலூர் வந்த குழுவினரை அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதுகுறித்து தீனதயாளன் கூறுகையில், ‘‘கடந்த 26 வருடமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரையாக எங்கள் குழுவினர் சென்று வருகிறோம். உலக நன்மை பொதுமக்கள் நோய் நொடியின்றி நலமாக வாழ வேண்டும். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். பசி பஞ்சம் ஒழிய வேண்டும் ஆகியவற்றிற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளோம். சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், வத்தலகுண்டு, தேனி, கம்பம், குமுளி, வண்டிப்பெரியார், எரிமேலி, பம்பை வழியாக ஐயப்பனை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளோம். நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 கிமீ தூரம் நடந்து சென்று 700 கிமீ தூரம் நடக்க உள்ளோம். இருமுடியை சுமந்தவாறு ஐயப்பனை பிரார்த்தனை செய்ய நடப்பதால் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கிறது. வருடந்தோறும் நாங்கள் யாத்திரையாக அய்யலூர் வந்தடையும்போது இப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்’’ என்றார்….
The post சென்னை – சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் 700 கிமீ பாதயாத்திரை பயணம் appeared first on Dinakaran.
