அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்த பெண்ணுக்கு மீண்டும் குவா...குவா...

நெல்லை: அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்த பெண் 5 ஆண்டுக்குப்பின் மீண்டும் குழந்தை பெற்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை டிவிஎஸ் நகரில் வசித்து வருபவர் திருமலைநம்பி(35) ஆட்டோ டிரைவர். இவருக்கும் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் ஜெகநாதபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கோமதி(32) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரேமா(6) என்ற மகள், வேல்முருகன்(5) என்ற மகன் உள்ளனர். நாம் இருவர் நமக்கு இருவர் என்ற அரசு பொன்மொழிக்கேற்ப கோமதி கடந்த 5 ஆண்டுக்கு முன் கருத்தடை ஆபரேஷன் செய்தார். நாங்குநேரி அரசு மருத்துவமனையில் 2வது குழந்தை வேல்முருகன் பிறந்தபின் கருத்தடை செய்து கொண்டார்.

இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன் கோமதிக்கு தான் மீண்டும் கர்ப்பம் அடைந்திருக்க கூடுமோ என்ற சந்தேகம் வந்ததால் அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் கோமதி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். 2 குழந்தை போதும் என்று கருதி கருத்தடை செய்தேன். அப்படி இருக்கையில் மீண்டும் எப்படி இது வந்தது என்று டாக்டரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நூற்றில் ஒன்றிரண்டு இப்படி ஆவது வழக்கம்தான் என்று சமாதானப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே 2 குழந்தையை வைத்து சமாளிக்கவே பெரும் பாடாக உள்ளது. இந்த குழந்தையை கலைத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார். கர்ப்பம் தரித்து 3 மாதம் ஆகிவிட்டது. இனி கருவை கலைக்கமுடியாது. அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து என எச்சரித்துள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி 3வது குழந்தையையும் சுமந்து வந்த கோமதி சில நாட்களுக்கு முன் அதே அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எப்படியோ 3வது குழந்தையும் பிறந்து விட்டது. இனியாவது கருத்தடை செய்வீர்களா என்று கோமதி டாக்டரிடம் கேட்டுள்ளார். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி கோமதி இங்குள்ள மருத்துவமனையில் கருத்தடை செய்து கொண்டார். 3வது ஆண் சிங்ககுட்டி என்பதால் கவலையுற்ற குடும்பத்தினர் சந்தோஷமடைந்தனர். அந்த குழந்தைக்கு சுந்தர் என பெயர் சூட்டியுள்ளனர்.

Related Stories: