சொத்து வரி செலுத்த ஜன. 15 வரை அவகாசம்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சியில், சொத்து வரி செலுத்த ஜனவரி 15ம்தேதி வரை கால அவகாசம் வழங்கி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர்  பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி  கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து  கொண்டனர். கேள்விநேரத்தின்போது, 10 உறுப்பினர்களும், நேரமில்லா நேரத்தில்  14 உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், 80  தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு டிசம்பர் 15ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது வரும் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது. கொரோனா, டெங்கு,  மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார  ஆய்வாளர்களின் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பணிகள் துறைக்கு நகர  திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யவும், கட்டணங்கள் மாற்றி அமைக்கவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாலையில் வணிக விற்பனையகம் நிகழ்ச்சிகள் (கமர்ஷியல் ஷாப்பிங் நிகழ்வுகள்) மாநகராட்சியின் சாலை பகுதிகளில் நடத்த  கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை  மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்த  அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1 லட்சத்து  77 ஆயிரம் தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின்விளக்குகளை பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள்  நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் பருவமழை காரணமாகவும், குடிநீர் குழாய்கள், மின் துறைகளின் மின் கம்பங்கள் மற்றும் மின் பகிர்மான பெட்டிகள், மின்மாற்றிக்ள் போன்றவை இடமாற்றம் செய்யும் பணி தாமதமானதாலும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்க முடியாத சூழ்நிலை உள்ள இடங்களில் 2023 மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு  திட்டங்களுக்கு ஏற்ப தயார்படுத்த முடிவு செய்யப்பட்டது உள்பட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. …

The post சொத்து வரி செலுத்த ஜன. 15 வரை அவகாசம்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: