சென்னை: பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி ரூ.1.74 கோடியை நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேரை துபாயில் இருந்து அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை உத்தண்டி பகுதியை சேர்ந்த பிரபல மருத்துவர் ராஜசேகர். இவர் தற்போது அசோக் நகரில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், தனது வயதான தாயை கடந்த 8 வருடமாக சிகிச்சைக்கு அழைத்து வந்த ஜனனி என்பவர் தனக்கு அறிமுகமானார். அப்போது அவர், ‘‘தான் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்துவதாகவும், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். பங்கு சந்தை குறித்து தனக்கு நன்கு தெரியும் என கூறினார். மேலும், என்னையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி நம்ப வைத்தார். இதையடுத்து, கடந்த எட்டு வருடமாக சிகிச்சைக்காக வரும் நபர் என்ற நம்பிக்கை அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டேன். பின்னர், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு வசதியாக, நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதியில் உள்ள தனியார் வங்கியில், அந்த பெண் கூறியவாறு சேமிப்பு கணக்கை தொடங்கினேன். இந்நிலையில், ஜனனி தன்னை வங்கிக்கு அடிக்கடி அழைத்ததாகவும், ஆனால், கிளினிக் நடத்துவதால், அங்கு செல்லமுடியாமல், தனது சேமிப்பு கணக்கை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, பங்கு சந்தையில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தார். இதற்கான 30 சதவீதம் கமிஷனை ஜனனி அவரிடமிருந்து பெற்றுகொண்டார். பின்னர், பங்கு சந்தையில் கிடைத்த லாபம் பற்றி அவரிடம் கேட்டபோது, அதையும் மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளதாக கூறினார். ஆனால், அவ்வாறு செய்யாமல் பண மோசடியில் ஈடுபட்டு வந்தார். இதனால் சந்தேகமடைந்த நான், அவரிடம் இதுபற்றி கேட்டபோது, லாபமாக வந்த ரூ.42 லட்சத்தை எனது சேமிப்பு கணக்கில் செலுத்தியதாக கூறினார். இதையடுத்து ,வங்கிக்கு சென்று விசாரித்தபோது, ரூ.1.74 லட்சத்தை ஜனனி, அவரது காதலன் சரவணன் மற்றும் ஜனனி தாய் மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே, அவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டு தருமாறு கோரி இருந்தார். இதையடுத்து, கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த 2019ம் ஆண்டு ஜனனி, தான் இயக்குனர் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியும், பல பேரிடம் சுமார் ரூ.114 கோடி பணமோசடி செய்ததும் இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது. மேலும், இந்த 3 பேரும் தற்போது துபாயில் தங்கி இருப்பதும், வாட்ஸ்-அப் மூலம் ராஜசேகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்….
The post பங்கு சந்தையில் அதிக பணம் கிடைக்கும் என ஆசை காட்டி பிரபல மருத்துவரிடம் ரூ.1.74 கோடி நூதன மோசடி: தொழிலதிபர் என போலி அறிமுகம், துபாயில் உள்ள 3 பேரை அழைத்து வர போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.
