ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியிடம்  ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ராஞ்சி மற்றும் பூரி நகரங்களில் ஐஆர்டிசியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இரண்டு ஓட்டல்களை பராமரிப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டது.  

வினய் மற்றும் விஜய் கோச்சாருக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல், இந்த இரண்டு ஓட்டல்களையும் ஒப்பந்தத்துக்கு எடுத்தது. தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், பினாமி நிறுவனமான டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம் மூலமாக பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் வழங்கியதாகவும் லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சிபிஐ சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம்சந்த் குப்தாவின் மனைவி சர்ளா குப்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி சுஜாதா ஓட்டல் இயக்குனர்கள் விஜய் மற்றும் வினய் கோச்சார் மற்றும் சாணக்கியா ஓட்டல் உரிமையாளர், ஐஆர்சிடிசி மேலாண் இயக்குனர் பிகே கோயல் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த விசாரணை நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: