விராலிமலை முருகன்கோயில் பெரியதேர் செப்பனிடும் பணி மும்முரம்: இதுவரை 50% நிறைவு கோயில் நிர்வாகம் தகவல்

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயில் தேர் செப்பனிடும் பணி தற்போது வரை 50 சதவீதம் நிறைவடைந்ததையொட்டி தைப்பூசம் தேரோட்டம் விமர்சையாக நடைபெறும் என கோயில் வட்டார தகவல் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் உள்ள பெரியதேர் நிற்கும் நிலையில் 18 அடி உயரமும் அலங்கரித்து சுற்றி வரும்போது 33 அடி உயரமும் கொண்டதாகும். இந்த தேரில் பொருத்தப்பட்டிருந்த மரத்திலான இணைப்புகள் மற்றும் மரத்தில் செய்யப்பட்ட கலை வடிவிலான சிற்பங்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் தேர் செய்யப்பட்டு பல வருடங்கள் கடந்ததாலும் சிதிலமடைந்தது. இதனால் சிதிலமடைந்த அந்த பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் தேரில் இருந்து கழன்று விழும் நிலை இருந்து வந்தது. இதனால் தேரோட்டத்தின்போது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலை கோயில் நிர்வாகத்தினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி தேரை செப்பனிட முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் 12ம் தேதி தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு செப்பனிடும் பணிகள் தொடங்கியது. ரூ.10 லட்சம் செலவில் செப்பனிடும் இந்த பணிக்கு அறநிலையத்துறை சார்பில் ரூ.5 லட்சம் உபயதாரர்கள் சார்பில் ரூ.5 லட்சம் நிதியில் தொடங்கிய இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது வரை மர வேலைப்பாடுகள் மற்றும் மரத்திலான சிற்பங்கள் தயாரிக்கும் தச்சுப்பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் மீதமுள்ள பணிகள் மற்றும் தேருக்கு நிழற்குடை அமைக்கும் பணி முடிந்து வரும் தைப்பூசத் திருவிழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post விராலிமலை முருகன்கோயில் பெரியதேர் செப்பனிடும் பணி மும்முரம்: இதுவரை 50% நிறைவு கோயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: