இந்தியாவில், தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்வதற்கு அமைச்சர்கள், அதிகாரிகளின் கூட்டுமுயற்சிதான் காரணம்: அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்வர் பெருமிதம்

சென்னை: இந்தியாவில், தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்வதற்கு அமைச்சர்கள், அதிகாரிகளின் கூட்டுமுயற்சிதான் காரணம் என  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் இல்லத் திருமண விழாவில், கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் பேத்தியுமான ஆவடி எஸ்எம்என்.ரசூல் மகளுமான கே.ஷெரின் கவுசியா மற்றும் வடபழனி, கங்கை அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசைன்-ஷகிலா பர்வின் தம்பதியரின் மகன் ஜா.கலீல் இப்ராஹிம் ஆகியோரின் திருமணம் நேற்று காலை 10 மணியளவில் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு தலைமை தாங்கி, மணமக்களிடம் மாலைகளை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். இதையடுத்து,  முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினும் மணமக்களை வாழ்த்தினர். பின்னர் மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘‘பால்வளத்துறையை பாராட்டத்தக்க அளவில் சிறப்பாக நடத்தி வருகிறார். பால்விலை குறைப்பின் மூலம் 4.20 லட்சம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். ஆவின் நிறுவனத்தில் தீபாவளி காலத்தில் நெய் விற்பனை அதிகரித்து இருந்தது. தற்போது கிறிஸ்துமஸ் தினத்துக்கு புதிய இனிப்பு வகைகள், 12 வகையான கேக் வகைகளை ஆவினில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.55 கோடி அளவில் மட்டுமே ஆவினில் பால் உற்பத்தியானது. நான் ஆட்சி பொறுப்பேற்றதும், தீபாவளியின்போது ரூ.35 கோடிக்கு பால் உற்பத்தி பொருட்கள் விற்பனையாகி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் ரூ.114 கோடி அளவுக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால்பொருட்களின் விற்பனை அதிகரிப்புக்கு நான் முதல்வர் என்பதால் அல்ல. பால்வளத்துறை அமைச்சராக நாசர் இருப்பதால்தான். அவரது முயற்சியில் ஆவின் பால் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட அனைத்து வகைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என ஆங்கில பத்திரிகையின் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. நம்பர் 1 முதல்வர் என சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதைவிட நம்பர் 1 மாநிலமாக தமிழகம் வரவேண்டும் என விரும்பினேன். அதன்படியே, தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக அறிவித்துள்ளனர். இந்த நம்பர் 1 சாதனைக்கு அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளின் கூட்டுமுயற்சிதான் காரணம்.வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டர்களாக மணமக்கள் விளங்கி, அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.’’ இவ்வாறு முதல்வர் பேசினார்.திருமணத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, காந்தி, ராமச்சந்திரன், மெய்யநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், கணேசன், கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, மு.க.தமிழரசு, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கே.ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்….

The post இந்தியாவில், தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்வதற்கு அமைச்சர்கள், அதிகாரிகளின் கூட்டுமுயற்சிதான் காரணம்: அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்வர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: