சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் பனி கொட்டி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் குளிர் காற்று வீசுகிறது. மாண்டஸ் புயல் கரையை கடந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாகவும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் நேற்று காலை வரை அதன் தீவிரத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக 20ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 20ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோன்று 21ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 21ம் தேதி தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, இன்று அந்தமான் கடல் பகுதியில் தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 47 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது….
The post குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழகத்தில் 20, 21ம் தேதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.