அஞ்சுகிராமம் அருகே பிச்சி, வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின: விவசாயிகள் கவலை

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் மேட்டுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் டார்வின். விவசாயியான இவர் பால்குளம் பகுதியில் வாழை மரங்கள் மற்றும் பிச்சிப்பூ செடிகள் பயிரிட்டுள்ளார். வாழைகள் தற்போது குலை விடும் பருவத்தில் உள்ளன. அதுபோல் பிச்சி செடிகளும் வளர்ந்து வருவாய் தரும் நிலையில் உள்ளது. இதுபோல் இந்த பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னந்ேதாப்புகள், நெல் வயல்களும் உள்ளன. இந்த நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு வரவும், எஞ்சிய தண்ணீரை வெளியேற்றவும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும்போது தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அடைத்துவிட்டனர். இதனால் இங்கிருந்து தண்ணீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் இங்கு அதிகளவில் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் வெளியேற வழியில்லாததால் இந்த பகுதி முழுவதும் குளம்போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் வாழை மரங்கள், பிச்சி செடிகள் அழுகும் அபாயம் உருவாகி உள்ளது. வருவாய் ஈட்டும் பருவத்தில் உள்ள பிச்சி செடிகள், வாழை மரங்கள் அழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல மாதங்களாக கடுமையாக உழைத்து, பெருந்தொகை செலவிட்டு பாதுகாத்து வளர்த்த மரங்கள் மற்றும் செடிகள் அழியும் சூழல் உருவாகி உள்ளதால் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, இதை நம்பி வாழ்ந்து வரும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சரியன திட்டமிடல் இல்லாமல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதே காரணம். கால்வாய்களை அடைக்கும்போது தண்ணீர் செல்வதற்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேற போதிய கால்வாய் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அஞ்சுகிராமம் அருகே பிச்சி, வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: