6 மாதமாக அம்மா என்னுடன் பேசவில்லை: பாக்யஸ்ரீ போர்ஸ் கண்ணீர்

சென்னை: தென்னிந்தியத் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ். அகில் அக்கினேனியுடன் அவர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘லெனின்’ தெலுங்கு திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளது. இதற்கிடையே, தமிழில் துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாக்யஸ்ரீ போர்ஸ், தான் சினிமாவில் நடிக்க வந்தபோது சந்தித்த குடும்ப எதிர்ப்புகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ‘‘நான் நடிக்கப் போவதாகச் சொன்னபோது என் குடும்பத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என் தாயிடம் பேசியபோது அவர் ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார்.

தந்தையிடம் கேட்டால், ‘அம்மாதான் வேண்டாம் என்கிறாளே’ என்றார். என் சகோதரியாவது ஆதரவு தருவாள் என்று நம்பியபோது, அவளும் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு மறுத்துவிட்டாள். இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமும் எனக்கு எதிராகவே நின்றது’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘‘சினிமா உலகம் மிகவும் பெரியது, அங்கு பல ஆபத்துகள் இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே பெற்றோர் பயந்தனர்.

இருப்பினும், என் கனவைக் கைவிட நான் விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த என் அம்மா, என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் (Block) செய்துவிட்டார். சுமார் ஆறு மாதங்கள் என்னிடம் பேசவே இல்லை. அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தபோதிலும், என் அம்மா என்னை ஒரு நாள் நிச்சயம் பெருமையாக நினைப்பார் என்ற ஒரே ஒரு நம்பிக்கையில் மட்டுமே நான் முன்னோக்கி நகர்ந்தேன்’’ என்று கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

Related Stories: