தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா மரணம்

ஐதராபாத்: மூத்த தெலுங்கு குணச்சித்திர நடிகையான பாவலா ஷியாமளா, ஐதராபாத்தில் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. 1985ம் ஆண்டு வெளியான ‘பாபாய் அப்பாய்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாகத் திரையுலகில் பயணித்து 250-க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

புரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளியான ‘ஆந்த்ரவாலா’ திரைப்படத்தில் இவர் ஏற்ற ‘பாவலா’ என்ற கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதுவே இவரது பெயருடன் இணைந்து ‘பாவலா ஷியாமளா’ என்று அழைக்கப்படக் காரணமானது. சுவர்ணகமலம், கட்கம், நேனு லோக்கல் மற்றும் மத்து வதலரா போன்ற பல படங்கள் இவரது சிறந்த நடிப்பிற்கு சான்றுகளாகும். கடந்த சில வருடங்களாகப் பட வாய்ப்புகள் இல்லாததாலும், முதுமை மற்றும் உடல்நலக் குறைவாலும் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வந்தார்.

இதயம் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, போதிய பணம் இல்லாததால் சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.இவர் தெருவில் ஆதரவற்ற நிலையில் இருந்தபோது, தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் மெகாஸ்டார் சிரஞ்சீவி போன்றோர் இவருக்கு மருத்துவச் செலவுகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில், தீவிர உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: