மும்பை: இரு பாகங்களாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ என்ற படத்தில், சீதை வேடத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தியில் வெளியான ‘ராமாயணம்’ என்ற பிரபல டி.வி தொடரில் சீதை வேடத்தில் நடித்திருந்த தீபிகா சிக்லியா, தற்போது சாய் பல்லவி குறித்து பேசியிருக்கிறார். அவரது கருத்து பல்வேறு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தீபிகா சிக்லியா கூறுகையில், ‘நான் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்திருக்கிறேன்.
அவர் மிகவும் அற்புதமான கலைஞர். ஆனால், சீதையாக அவர் திரையில் எப்படி தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது. திரையில் பார்த்த பிறகுதான் அதை முடிவு செய்ய முடியும். ராமாயணத்தில் சீதையின் தோற்றம் பற்றிய தெளிவான வர்ணனைகள் இருக்கின்றன. பாதாம் போன்ற கண்கள், குறிப்பிட்ட உயரம், கூந்தல், மேனி நிறம் என்று அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
‘ராமாயணம்’ டி.வி தொடர் இயக்குனர் ராமானந்த் சாகர் அந்த அம்சங்களை மட்டுமே தேடினார். அதை என்னிடம் கண்டறிந்து நடிக்க வைத்தார். அதோடு, ராமாயணத்தில் சுருள் முடி கொண்ட சீதையை பற்றி எந்த குறிப்பும் இல்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் ‘ராமாயணம்’ தொடர் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு, இன்றைய புதிய தலைமுறையினர் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த பிம்பத்தை மக்கள் மனதில் இருந்து எளிதில் அழித்துவிட முடியாது.
