ஜனநாயகன் விமர்சனம்…

சிறைக்கைதி விஜய்யை அவரது அம்மா ரேவதி கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அழைத்துச் சென்று வந்த போலீஸ் அதிகாரி கவுதம் வாசுதேவ் மேனன், திடீரென்று ஒரு விபத்தில் மரணம் அடைகிறார். ஆதரவற்ற அவரது மகள் மமிதா பைஜுவுக்கு சித்தப்பா ஸ்தானத்தில் பாதுகாவலனாக மாறும் விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னபடி மமிதா பைஜுவை ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கிறார். அப்போது நரேன் கொடுத்த ஃபைலை முதலமைச்சர் நாசரிடம் கொடுத்த மமிதா பைஜுவை கொல்ல பாபி தியோல், ஆட்களை அனுப்புகிறார்.

ஆப்பிரிக்காவையே துவம்சம் செய்த சமூக விரோதி பாபி தியோல், மிகப்பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இதையறிந்த விஜய் என்ன செய்கிறார் என்பது மீதி கதை. தெலுங்கு ‘பகவந்த் கேசரி’ படத்தை தழுவி படமாக்கியுள்ளனர். விஜய்யின் கடைசி படம் என்பதால், ஓவர்டோஸ் கொடுத்து, 3 மணி நேர படத்தை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்க வைத்துள்ளார், இயக்குனர் ஹெச்.வினோத். படம் முழுக்க விஜய்யை பற்றி பல கேரக்டர்கள் பில்ட்அப் செய்துகொண்டே இருக்கின்றனர்.

முழு படத்தையும் தளபதி வெற்றிகொண்டான் என்ற கேரக்டரில் விஜய் தனது தோளில் சுமந்து, படத்தில் வில்லன்களை பொளந்து கட்டி வழக்கம்போல் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார். மமிதா பைஜு அசத்தலாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு வேலையில்லை. பிரியாமணி, ரேவதி, ஸ்ரீநாத், ஸ்ரீமன், புஸ்ஸி என்.ஆனந்த், நாசர், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் வந்து போகிறார்கள்.

பாபி தியோல் வில்லன் என்றாலும், பிரகாஷ்ராஜ் ஏற்படுத்திய சலசலப்பை அவரால் கிராஸ் செய்ய முடியவில்லை. நிழல்கள் ரவி, நரேன், சுனில், ரெய்ச்சல் ரெபேக்கா, கஜராஜ், முத்துக்குமார் உள்பட பலர், இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர். அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் ஒரு காட்சியில் தோன்றியுள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள், விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து. பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு நன்று. பெண்களின் தைரியம், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை போன்ற விஷயங்களை சொன்ன இயக்குனர் ஹெச்.வினோத், திடீரென்று ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மதுரை, சென்னை என்று பயணித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மத மோதல்கள், கள்ளச்சாராய மரணங்கள், ரிமோட் கண்ட்ரோல் வார், கனிமவள கொள்ளை, ரோபோடிக் தொழில்நுட்பம், அரசியல் ஆடுபுலி ஆட்டம் என்று என்னென்னவோ திணித்து, துண்டான கதைகளை ஒரு புள்ளியில் சேர்க்க பகீரத பிரயத்தனம் செய்திருக்கிறார்.

Related Stories: