மலையாளத்தில் அறிமுகமாகும் மாளவிகா சர்மா

பிருத்விராஜ் சுகுமாரன், வைசாக், ஜினு ஆபிரகாம் கூட்டணியில் உருவாகும் மலையாள படம், ‘கலீஃபா’. இதன் டேக்லைன்,​‘பழிவாங்குதல் பொன் எழுத்துகளால் எழுதப்படும்’. படத்தில் மாம்பறக்கல் ஆமிர் அலி என்ற கேரக்டரில் பிருத்விராஜ் சுகுமாரன், மாம்பறக்கல் அகமது அலி என்ற சிறப்பு வேடத்தில் மோகன்லால் நடிக்கின்றனர். 2 பாகங்களாக உருவாகும் இதன் 2ம் பாகத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். தங்கம் கடத்தப்படுவதை மையமாக வைத்து, பிரமாண்டமான மாஸ் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

தெலுங்கு நடிகை மாளவிகா சர்மா, பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் மலையாளத்தில் அறிமுகமாகின்றனர். மாஸ் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் திரில்லரான இதில், விறுவிறுப்பான சேசிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘போக்கிரி ராஜா’ படத்துக்கு பிறகு வைசாக், பிருத்விராஜ் சுகுமாரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. லண்டன், துபாய், கேரளா, நேபாளம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் ‘அசலாயவளே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையில் சித் ஸ்ரீராம், மக்பூல் மன்சூர் இணைந்து பாடியுள்ளனர்.

Related Stories: