மும்பை: இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கும் ஹுமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித் குமாரின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘டாக்ஸிக்’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்திருந்த ‘பேபி டூ டை டூ’ என்ற இந்திப் படம் திரைக்கு வந்திருந்தது. இதில் அவர் காது கேட்காத, வாய் பேச முடியாத ஒப்பந்த கொலையாளி வேடத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து பேசிய ஹுமா குரேஷி, ‘இப்படத்தைப் போல் பெண்களை வலிமையானவர்களாக சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் அதிகமாக எழுதப்பட வேண்டும்.
பெண் கொலையாளிகள் எப்போதும் ஏன் இறுக்கமான குட்டி ஆடைகள், உயரமான ஹீல்ஸ் அணிந்து, கவர்ச்சியாகவே தோன்ற வேண்டும்? அது யதார்த்தம் கிடையாது. பெண்களை ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பார்க்கும் மனப்பான்மையில் இருந்தே இதுபோன்ற சித்தரிப்பு உருவாகிறது. சக்தி வாய்ந்தவர்களாக காட்டப்படுவதற்கு பெண்களை கவர்ச்சிப் பொருளாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை இயல்பானவர்களாகவே காட்டலாம்’ என்றார்.
