நான் முதல்வராக இருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

வாழப்பாடி: நான் முதல்வராக இருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று வாழப்பாடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு, தனது முதல் கட்ட பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கினார். ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:- அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், ஏராளமான உதவிகளையும் செய்து வந்துள்ளது. குறிப்பாக படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தற்போது வரை 52 லட்சத்து 31 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு,  நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மேம்பட, தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.கடந்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தியை  பெருக்கியதின் மூலம், தேசிய விருது பெற்ற ஒரே அரசு அதிமுக அரசுதான். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், தேசியவிருது பெறப்பட்டுள்ளது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதேபோல், உயர்கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்த அரசு புதிதாக கொண்டு வந்த பல கலைக் கல்லூரிகள் மற்றும் அறிவியல் கல்லூரிகளின் காரணமாக, உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. முதல்வராக நான் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். நான் பொறுப்பேற்ற உடனேயே கடும் வறட்சி, பிறகு புயல், தொடர்ந்து கொரோனா தொற்று என பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த அரசு பல்வேறு வகையிலும் உதவி புரிந்து, மக்களை பாதுகாத்து வருகிறது. சேலத்தை சேர்ந்த நான் முதல்வராக இருப்பது, இந்த மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை. என்னைப் பொருத்த வரை மக்கள் தான் முதலமைச்சர்.  ஜெயலலிதா இறந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே, எங்களை வெற்றி பெறச் செய்ய, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  இவ்வாறு பழனிசாமி பேசினார்….

The post நான் முதல்வராக இருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: