பயோபிக் படத்தை கைவிட்ட மடோனா

அமெரிக்காவை சேர்ந்த பாடகி மடோனா (67), கடந்த 40 வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் கோலோச்சி வருகிறார். அவர் பாடிய ‘லைக் எ பிரேயர்’, ‘மெட்டீரியல் கேர்ள்’, ‘ஹங் அப்’, ‘ரே ஆஃப் லைட்’ ஆகிய பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. அவரது வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து படமாக்க பலர் முயற்சித்த நிலையில், அதற்கு அவர் பலமாக மறுத்துவிட்டார். பிறகு அவரே தனது பயோபிக் படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த அதில், அவரது இசை மற்றும் நடனப் பயணம் குறித்து சொல்லப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், திடீரென்று இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக மடோனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கை பற்றிய படத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் செலவிட்டேன். நடிகர்களை தேர்வு செய்ய மேலும் இரண்டு ஆண்டுகளை செலவிட்டேன். ஆனால், பட்ஜெட் விஷயத்தில் எனக்கும், யுனிவர்சல் நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் வாழ்ந்தது அசாதாரணமான, பிரமாண்டமான வாழ்க்கை என்பதால், அதற்கு பெரிய அளவிலான பட்ஜெட் தேவைப்பட்டது. அவர்கள் என்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதால், உடனடியாக எனது பயோபிக் படம் கைவிடப்பட்டுள்ளது. பிறகு நெட்பிளிக்ஸ் தயாரிக்க முன்வந்தது. ஆனால், எனது பயோபிக் படத்தின் கதை உரிமம் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருப்பதால், தற்போது அதை படமாக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: