சென்னை: சமந்தா தயாரித்து நடித்து திரைக்கு வந்த ‘மா இன்ட்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படம், மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமந்தாவின் நெருங்கிய தோழியும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தவருமான நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘உனக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாம்.
அனைத்து அன்புக்கும், வெற்றிக்கும் நீ முற்றிலும் தகுதியானவள். ‘மா இண்டி பங்காரம்’ படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது திடீர் வாழ்த்தை கண்டு நெகிழ்ந்த ரசிகர்கள், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
