×

தியேட்டரில் பாப்கார்ன் விலை குறைக்கணும்: முதல் முறையாக பேசிய ஒரே நடிகர்

சென்னை: சினிமா தியேட்டர்களுக்கு வந்து மக்கள் படம் பார்க்கும் நிலை மாறிவருகிறது. தியேட்டர் அனுபவம் கிடைக்கும் என்பதற்கான அடையாளத்துடன் 100 சதவீத பொழுதுபோக்கு படம் வரும்போது மட்டுமே மக்கள் தியேட்டர் பக்கம் வருகிறார்கள். மற்றபடி ஓடிடியில் படம் பார்ப்பதுதான் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தற்போது தியேட்டர்கள் எல்லாம் மால்களில் இருக்கிறது.

இங்கு ஒரு பாப்கார்ன் விலை மட்டுமே ரூ.450 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. தியேட்டர்களில் பாப்கார்ன் விலையை கட்டுப்படுத்தக் கோரி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டார்கள். சமூக நல ஆர்வலர்கள் நீதிமன்ற படிகள் ஏறிப் பார்த்துவிட்டார்கள். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. கோடிகளில் சம்பளம் வாங்கும் எந்த நடிகரும் இது பற்றி வாய் திறந்து பேசுவதில்லை.

சினிமா உலகை சேர்ந்த யாருமே இது பற்றி பேசுவதில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் முதல்முறையாக ஒரு நடிகர் இந்த விவகாரம் குறித்து நேற்று பேசியிருக்கிறார். அவர், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசும்போது, “இந்தியாவில், சினிமா இன்றும் மிக மலிவான பொழுதுபோக்கு சாதனமாகவே உள்ளது. இது நல்ல விஷயம்தான்.

குடும்பத்தினருடன் திரையரங்கிற்குச் சென்று, படம் குறித்துப் பேசுவது ஒரு சிறந்த கூட்டுச் செயல்பாடாகும். ஆனால் பாப்கார்ன் விலைகள் குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். ராம் சரணின் இந்த பேச்சுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Tags : Chennai ,
× RELATED மேரேஜ் ஸ்டோரியில் மீண்டும் இணைந்த கூட்டணி