மும்பை: சமீபத்தில் மராத்திய மொழியில் ‘தேவுல் பந்த் 2’ என்கிற திரைப்படம் வெளியானது. விவசாயிகளின் பிரச்னையை மையப்படுத்தி வெளியான இந்த படத்தை பிரவீன் தார்டே என்பவர் இயக்கியுள்ளார். 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தற்போது 82 கோடி வசூலித்து 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை ஷாருக்கானுக்கு சொந்தமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில்தான் மேற்கொண்டு வந்தனர்.
விஎப்எக்ஸ் பணிகளுக்காக 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்த நிலையில், இறுதி பில் தொகை 42 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. ஆனால், தயாரிப்பாளரிடம் மேற்கொண்டு செலுத்துவதற்கு பணம் எதுவும் இல்லை. இந்த தொகையை செலுத்தினால் தான் படத்தை வெளியிட முடியும் என்கிற சூழ்நிலையில், ரெட் சில்லீஸ் நிறுவனத்திடம் படக்குழு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
இது பற்றி ஷாருக்கானுக்கு தெரியவந்ததும், சிறு பட்ஜெட்டில் நல்ல தரமான படத்தை தயாரித்துள்ளனர். அதனால் அவர்களிடம் ஒரு பைசாவும் வாங்க வேண்டாம். முழு பணியும் முடித்து படத்தை கொடுத்துவிடுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் இப்போதுதான் இந்த பட இயக்குனர் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. படம் இத்தனை கோடி வசூலித்தும் ஷாருக்கான் இதுவரை தனது நிறுவனம் மேற்கொண்ட பணிக்காக பணம் வாங்கவில்லையாம்.
