இந்திரன்ஸ், மதுபாலா நடித்த ‘சின்ன சின்ன ஆசை’ என்ற படத்தை வர்ஷா வாசுதேவ் இயக்கினார். மலையாளம் மற்றும் தமிழில் உருவான இப்படம் திரைக்கு வந்துள்ளது. இதுகுறித்து மதுபாலா கூறுகையில், ‘நான் நடித்த ‘ரோஜா’ படத்தின் பாடல் வரியையே இப்படத்துக்கு தலைப்பாக சூட்டியிருந்தனர். ‘சின்ன சின்ன ஆசை’ என்ற தலைப்பு, மீண்டும் அந்த இனிமையான நினைவுகளை உயிர்ப்பித்தது. அதேவேளையில், இது ஒரு தனித்துவமான கதையுடன் உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான படம் என்பதால், இது எனது வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது.
படப்பிடிப்புக்காக ஒரு மாதம் காசி மாநகரில் தங்கியிருந்த அனுபவம், எனக்குள் ஆழமான ஒரு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நகரின் பரபரப்பான சூழ்நிலை, ஆரவாரமான கங்கை நதி, அங்கு வசிக்கும் மக்களின் ஆன்மீக வாழ்க்கை முறை மிகவும் ஆழமாக பாதித்தது. திரையில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்திலும் இந்திரன்ஸ் சிறந்த மனிதராக இருந்தார். இதுவரை பல படங்களில் நடித்துள்ளேன். அப்போது கிடைத்த திருப்தியை போல் பல மடங்கு அமைதியை இப்படம் கொடுத்தது. எனது திரைப்பயணத்தில் சிறப்பான படங்களில் இதுவும் ஒன்று’ என்றார்.

