தானம்… எத்தனை தானம்..!

தர்மங்களை எதற்காக சமயங்கள் வலியுறுத்து கின்றன? இரண்டு காரணங்கள். ஒன்று,  இறைப்பற்றின், இறைநேசத்தின் அடையாளம் தான தர்மங்கள். அடுத்து, பொருள் மீதான  பேராசையை நீக்கி இதயத்தைத் தூய்மைப்படுத்துதல். இஸ்லாமிய வாழ்வியல் தான தர்மங்களைப் பல வகைகளிலும் ஊக்குவிக்கிறது. தானம் பல வகைப்படும். அவற்றில்  முதன்மையானது பசித் துயரைப் போக்குவது. “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும். இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்…” என்று பாடினான் பாரதி. சமுதாயத்தில்  யாரேனும் ஒருவர் உணவு கிடைக்காமல் உயிர் இழந்துவிட்டார் எனில், ஒட்டுமொத்த  சமுதாயமும் பொறுப்பாளி ஆகும் என்று எச்சரிக்கிறது இஸ்லாம்.“அண்டை வீட்டார் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்றார் நபிகளார். “விதவைகளுக்கும் வறியவர்களுக்கும் ஒருவர் உதவினால் அவர் இரவு முழுக்க நின்று வழிபட்டவர் போலவும், பகல்முழுக்க நோன்பு நோற்றவர் போலவும் ஆவார்” என்று கூறினார் அண்ணல் நபிகளார்.அதாவது, இரவு முழுக்க நின்று வழிபடும்போதும்  பகல் முழுக்க நோன்பு நோற்கும் போதும் எந்த அளவு புண்ணியம் கிடைக்குமோ அந்த  அளவு புண்ணியம் விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவும்போது கிடைக்கிறது. காசு  பணத்தைக் கொடுப்பது மட்டுமே தான தர்மமல்ல, “நீ உன் சகோதரனைப் புன்னகையுடன் பார்ப்பதும் தர்மமே” என்றார் இறைத்தூதர். தான தர்மத்தின் வகைகளை நபிகளார் அழகாகப் பட்டியல் போட்டுச் சொல்லியிருக்கிறார்.“இரண்டு மனிதர்களுக்கு இடையில் ஒருவர் நீதி வழங்குவதும்  தர்மமே.”“ஒருவருக்கு வாகனத்தில் ஏற உதவுவதும் தர்மமே.”“அவருடைய பொருள்களை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் தர்மமே.”“நல்ல சொற்களைப் பேசுவதும் தர்மமே.”“தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமே.”“தொல்லை தரும் பொருள்களைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் தர்மமே.”“உன் சகோதரனின் முகம் நோக்கி நீ புன்னகைப்பதும் தர்மமே.”“வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்கு வழிகாட்டுவதும் தர்மமே.”“உன்னுடைய சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்பித் தருவதும் தர்மமே.”“நல்ல விஷயங்களை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மமே.”இவ்வாறு  தான தர்மங்கள் பற்றி நபிகளார் நீண்ட பட்டியலே தந்துள்ளார். இதற்குப் பெரிய  காசுபணம் எல்லாம் தேவையில்லை. நல்ல மனமும், நல்ல எண்ணமும் இருந்தால்  போதும்தானே.- சிராஜுல்ஹஸன்…

The post தானம்… எத்தனை தானம்..! appeared first on Dinakaran.

Related Stories: