பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களின் தொடர் தோல்வியால் கடும் விரக்தியில் இருக்கிறார். அதனால் தனது அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதன்படி தனது நீண்ட நாள் கனவான ‘வேள்பாரி’ என்ற நாவலை மையப்படுத்தி படம் உருவாக்க திட்டமிட்டார். 2 பாகங்களாக பிரமாண்டமாக உருவாக உள்ள அப்படத்தின் திரைக்கதையை கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முடித்துவிட்டார் ஷங்கர். ஆனால் அதிக பட்ஜெட் மற்றும் நடிகர்களின் தேர்வு காரணமாக இன்னும் அப்படம் தொடங்கப்படாமல் உள்ளது.
மேலும், ஷங்கரின் தொடர் தோல்வியால் தயாரிப்பாளர்களும் அவர் படங்களை தயாரிக்க சற்று தயங்கி வருகின்றனர். இந்நிலையில், ‘வேள்பாரி’ படத்திற்கு முன்பாக 70 நாட்கள் என்ற குறுகிய காலக்கட்டத்தில் ஆக்ஷன் திரில்லர் படம் ஒன்றை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். முழுக்க, முழுக்க இளம் நடிகர்களை மட்டுமே வைத்து உருவாக உள்ள அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
