கடந்த 1980களில் திருநெல்வேலி மாவட்ட கிராமத்து பின்னணியில், நெசவுத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்க்கை, அவர்களின் லட்சியம், போராட்டம் மற்றும் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் இது. இதுவரை எந்த தமிழ் படத்திலும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் முழுநீள வாழ்வியல் முறையை, அவர்களின் கலாசாரத்தை இவ்வளவு நேர்த்தியாக காட்டியது இல்லை என்பதே இயக்குனர் மீரா கதிரவனுக்கு விருது கிடைத்த மாதிரி.
நெசவுத்தொழிலாளி கஸ்தூரிராஜாவின் யதார்த்தமான நடிப்புதான் படத்தின் முக்கிய தூண். ஹீரோ ஈஸா, புதுமுகம் போல் தெரியவில்லை. மதுரையிலிருந்து வந்திருக்கும் மற்றொரு சிறந்த கலைஞனாக தனது நடிப்பால் மிளிர்கிறார். கண்டிப்பாக கோலிவுட்டில் ஈஸா கோலோச்சுவார். மாளவிகா மனோஜ் கவர்கிறார். தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, சன் சாகுல் உள்பட அனைவரும், அந்தந்த கேரக்டராகவே மாறி அசத்தியுள்ளனர்.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு கச்சிதம். காட்சிகளின் வீரியத்தை பின்னணி இசையால் வலுப்படுத்திய சாம் சி.எஸ், படத்துக்கு படம் தனது பலத்தை நிரூபித்தபடி இருக்கிறார். இதிலும் இசையால் நமது மனங்களை வருடிப்போகிறார். படத்தொகுப்பாளர் வி.எஸ்.மதி, ஆர்ட் டைரக்டர் அப்புன்னி சாஜன், எழுத்தாளர் வி.எஸ்.முகமது அமீன் ஆகியோர் பணி, சிறப்பு. இப்படத்தை தாராளமாக பார்க்கலாம். முற்பகுதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் திருஷ்டி பொட்டு.
