அளவிலாது அருள்வாள் அலர்மேல் மங்கை

திருச்சானூர், ஆந்திராவைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். மகாலட்சுமி சந்திரவம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள். தக்க பருவம் வந்ததும் பத்மாவதி – ஸ்ரீநிவாசன் திருமணம் நடந்தது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக புராணம்.மகாலட்சுமியான பத்மாவதியைத் தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு வேங்கடவன் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம். பத்மாவதி – ஸ்ரீநிவாசன் திருமண விருந்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படவில்லை என்பதால், தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பரமும், கருவேப்பிலையும் எந்த விதத்திலும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.பத்மாவதி தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்துவிட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். திருமலையில் வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜபுரத்தில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை சுவாமி புஷ்கரணிக்கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடும் மரபு என்பார்கள்.பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதி தேவிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக கொண்டுவரப்படுகின்றன. அவை யானை மீது வைத்து திருச்சானூர் மாட வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாணவனம் எனும் இடத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். விதவிதமான கல்யாண விருந்து தயாரானவுடன் பத்மாவதி தாயார் ஸ்ரீநிவாசரிடம் யாருக்கு இந்த பிரசாதங்களை நிவேதிப்பது என்று கேட்க, அஹோபிலம் நரசிம்மருக்கு நிவேதிக்கலாம் என்று அவர் யோசனை தெரிவிக்க, இருவரும் அஹோபிலம் இருந்த திசை நோக்கி பிரசாதங்களை நிவேதித்ததாக தலபுராணம் கூறுகிறது. ‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்திப் பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.தொகுப்பு: ந.பரணிகுமார்

The post அளவிலாது அருள்வாள் அலர்மேல் மங்கை appeared first on Dinakaran.

Related Stories: