லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் பார்வையாளர்களையும், வசூலையும் குவித்து வருகிறது அப்செஷன் ஹாலிவுட் திரைப்படம். இந்தியாவில் இந்தப் படம் கடந்த 29-ம் தேதி வெளியானது. கேரி பேக்கர் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. ஹாரர் ஜானரில் வெளிவந்துள்ள இந்தப் படத்தின் ரன் டைம் 1 மணி நேரம் 49 நிமிடங்கள். விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை இந்தப் படம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கதைப்படி, படத்தின் நாயகியை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகன். ஒரு கட்டத்தில் அவனுக்கு அபூர்வ பொருள் கிடைக்கிறது. அதன் மூலம் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்க முடியும். அதற்கு அவன், உலகிலேயே மற்ற அனைவரையும் விட தன்னையே நாயகி விரும்ப வேண்டும் என வரம் கேட்கிறான். அந்த வரம் எப்படி விபரீதமாகிறது என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிகை இண்டி நவராட்டே (நிக்கி) மற்றும் நடிகர் மைக்கேல் ஜான்ஸ்டன் (பேரான்) ஆகியோர் நடித்துள்ளனர். இதன் கதையை மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் இயக்குநர் கேரி பேக்கர். இந்த படத்தின் பட்ஜெட் 1 மில்லியன் டாலர் ஆகும். அதவாது ஒரு தமிழ் படத்துக்கான பட்ஜெட்டான ரூ.10 கோடிதான் இதன் பட்ஜெட். இந்நிலையில், இந்த படம் உலக அளவில் இதுவரை சுமார் 225 மில்லியன் டாலர்களை (ரூ.2,150 கோடி) வசூலித்துள்ளது. இந்தியாவில் இந்த படம் வெளியாகி 11 நாளான நிலையில் இதுவரை ரூ.35 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
