பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் நடித்த `பரிமளா அண்ட் கோ’ என்ற படம், வரும் 5ம் தேதி திரைக்கு வரும் நிலையில், ஊர்வசி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘இப்போது யாரையும் உருவகேலி செய்ய முடியாது. ஆரம்பகாலங்களில் அதற்கு எதிராக நிறைய போராட வேண்டியிருந்தது. விரும்பத்தகாத வார்த்தைகளின் மூலம் பரிகாசம் செய்வதற்கு எதிராக நான் நிறைய பேசியிருக்கிறேன். திரைத்துறை என்பதை தாண்டி தனிப்பட்ட முறையிலும் பேசியிருக்கிறேன். ஆனால், அந்த செயல் வரவேற்கத்தக்கது இல்லை. சில நடிகைகளை திருமணத்துக்கு பிறகு நான் கவனித்திருக்கிறேன்.
தங்களின் உடல் எடை அதிகரித்தது தெரியக்கூடாது என்ற கவனத்துடன், அதை புடவையால் மறைத்துக்கொண்டே செல்வார்கள். அதுபற்றி ஏதாவது பேசுவார்கள் என்ற பயம்தான் இதற்கு காரணம். இதெல்லாம் உடனே மாற்றப்பட வேண்டிய விஷயங்கள். முதலில் எனக்கு இதுபோன்ற விஷயங்கள் தெரியாது. நாமும் கூட ஆரம்பத்தில் கிண்டலாக சிரித்திருப்போம். முன்பு நானும், குமரிமுத்துவும் ஒரு படத்தில் நடித்தோம். அப்போது இயக்குனர் என்னிடம், `நீயும் அவரை போல் கண்ணை வைத்துக்கொண்டு நடி’ என்றார். நானும் நடித்தேன். அதை பார்த்து பலர் சிரித்தனர். இது நடந்து சில வருடங்கள் கழித்து குமரிமுத்துவை பேட்டி எடுத்தேன்.
அவரது ஆசைகள் குறித்து கேட்டபோது `எனக்கு போலீசாக வேண்டும் என்று ஆசை. எனது கண் அதற்கு தடையாகி விட்டது. டிரைவிங் கற்றுக்கொள்ள செல்லும்போது கூட ஏளனமாக பேசுவார்கள். நீயும் கூட என்னை மாதிரி கண்ணை வைத்துக்கொண்டு நடித்தாய். எனக்கு ஒருமாதிரியாகி விட்டது. அந்த வேதனையில் இருந்து மீண்டு வர நேரமானது’ என்று அவர் சொன்னபோது, என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அன்று முதல், இனிமேல் யாரையும் கிண்டல் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன்’ என்றார்.
