ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீநாத் பாஸி இணைந்து நடித்துள்ள படம், `வெக்கை’. பா.ரஞ்சித்தின் இணை இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நமது அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு சாலை தகராறை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. ஒரு நிமிட கோபம் எத்தனைபேரின் வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது என்பதையும், சாலை தகராறுக்கு பின்னால் மறைந்துள்ள அகங்காரம், ஆத்திரம், அதன் எதிர்பாராத விளைவுகளை மையப்படுத்திய ஆக்ஷன் திரில்லர் படமான இதன் கதை, சென்னை பின்னணியில் நடக்கிறது.
தவிர ஷிவானி ராஜசேகர், சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமிப்பிரியா நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். அறிவு, மவுனன் யாத்ரீகா பாடல்கள் எழுதுகின்றனர்.
