பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்

நன்றி குங்குமம் தோழி ;“ஒரு துறையில் ஒருவர் சாதிக்கிறார் என்றால் பெரும்பாலும் அது அவரது சிறு வயது கனவு, ஆர்வம்… என்றிருக்கும். அதே போல்தான் எனக்கும் போட்டோகிராபி. இன்ஜினியரிங் முடித்து, பத்திரிகை துறையில் இருந்து பின்னர் போட்டோகிராபிக்கு வந்தேன். பொறியியல் துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று தான் என் பெற்றோர்கள் விரும்பினாங்க. குறிப்பா அப்பாவுக்கு போட்டோகிராபி துறை மீது கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஆனால், அம்மா என்னை பற்றி புரிந்து கொண்டாங்க. எனக்கு உறுதுணையாகவும் இருந்தாங்க. அதனால் ஆரம்பத்தில் பகுதி நேரமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து கல்யாணம் போன்ற நிகழ்வுகளை படம்பிடித்தேன். அதன் மூலம் ஓரளவு சம்பாத்தியம் கிடைச்சது. இதில், கிடைத்த வருமானத்தை கொண்டு எனக்கென்று சொந்தமா கேமரா வாங்கி எனது வேலையை தீவிரமாக தொடங்கினேன்’’ என்கிறார் அனிதா. போட்டோகிராபி என்பது மிகவும் ரசனை சார்ந்தது. இதில், பலரும் பல விதமாக புகைப்படங்களை எடுத்து இத்துறையில் சாதித்தும், சம்பாதித்தும் வருகின்றனர். பொதுவாக எல்லாருடைய வாழ்க்கையிலும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இது போன்ற போட்டிகள் நிறைந்த உலகில் தன்னுடைய அடையாளத்தை இந்த சமூகத்திற்கு வெளியே கொண்டு வர போராடி, அதில் வென்றும் உள்ளார் அனிதா.“பல பேர் மாடல் போட்டோகிராபி எடுத்து பிரபலமாகிறார்கள். அதெல்லாம் குறி வைத்து எடுப்பதில் ஆர்வம் இல்லை. ஒரு நபரை பார்த்தால் மனதில் தோன்றும், இவரை எடுத்தால் நன்றாக இருக்குமென்று. அவ்வாறு எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களில் போடும் போது நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. அதில், குறிப்பாக தோழி ஒருத்தியை ஓடும் ரயிலில் எடுத்ததை பார்த்து நடிகைகளிடமிருந்து கூட வாய்ப்புகள் வந்தது. விளம்பர நிறுவனமும் என்னை அணுகினர். ஒரே மாதிரி ஷூட் செய்ய எனக்கு விருப்பமில்லை. புதுசு புதுசா முயற்சி செய்வதில்தான் ஆர்வம். அந்த முயற்சியில்தான் food photography எடுக்க தொடங்கினேன்.ஒரு பெண்ணாக இந்தத் துறையில் செயல்படுவது ஆரம்பத்தில் சவாலாகவே இருந்தது. அந்த சவால் எனக்குள் தன்னம்பிக்கையையும், எனக்கான பாதை இது தான் என்றும் புரிய வைத்திருக்கிறது. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காட்ட அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. food photography – எனக்கானதாக மாறியது. அதில் சிறு உணவகம் முதல் பிரபல உணவகம் வரை எடுக்க ஆரம்பித்தேன். தற்போது இந்த துறையில் கவனிக்கத்தக்க நபராக மாறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொதுவாக போட்டோகிராபி துறையில் க்ரியேட்டிவிட்டி ரொம்ப முக்கியம் அதே போல கேமரா, லென்ஸ், லைட்டிங் போன்ற விஷயங்களில் நாளுக்கு நாள் அப்டேட் அவசியம். மற்ற போட்டோகிராபர்களுக்கு சவாலாக இருக்கணும். ஒரு பக்கம் ஃபேஷன் போட்டோகிராபி, இன்னொரு பக்கம் உணவு போட்டோகிராபினு எல்லா நாட்களும் பிசியாக வைத்திருக்கிறேன். இதை என் திறமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லுவேன்” என்கிறார் அனிதா.தொகுப்பு: ஆனந்தி.ஜெ

The post பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் appeared first on Dinakaran.

Related Stories: