ஆர்வம் கற்பனைத் திறன் இருந்தால் சாதிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

“சிறு வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்த போது கிடைத்த பாராட்டை திரும்பத் திரும்ப பெறும் ஆசையில் உண்டானதுதான் எனது கிராஃப்ட் கனவுகள்’’ என்கிறார் கிரேஸி இருதயராஜ். வேண்டாம் என்று தூக்கி எறியும் உபயோகமற்ற பொருட்களை பயன்படுத்தி அழகழகான கைவினைப் பொருட்களை செய்து வருகிறார் முகப்பேரை சேர்ந்த கிரேஸி. ஐஸ்கிரீம் குச்சிகள், தேங்காய் ஓடுகள், பழைய பேப்பர், வில்வ பழம் போன்றவற்றை உபயோகப்படுத்தி அழகிய கலைநயமிக்க பொருட்களை தயாரித்து வரும் கிரேஸி அது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

கைவினைப் பொருட்களில் ஆர்வம்…

முதலில் கூடை பின்னும் வயரில் ஃப்ளவர் வாஷ், பொம்மைக்கு உடைகள், பள்ளியில் கற்றுத்தந்த பூ தையல் வைத்து என் உடைகளுக்கு சின்னச் சின்ன எம்பிராய்டரி செய்வது போன்றவற்றை செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் பள்ளிப் படிப்பிற்கு பிறகு எனது உடைகளை நானே தைக்க துவங்கினேன். இதற்காக நான் சிறப்பு தையல் பயிற்சி எல்லாம் எடுக்கவில்லை. ஒரு உடையை தைக்க வேண்டும் என்றால், அதை முழுமையாக பிரித்துவிடுவேன். அதன் பிறகு அதனை மாடலாக வைத்து முதலில் பழைய புடவைகளில் தைத்து பயிற்சி எடுத்தேன். அப்படித்தான் நான் தையல் கற்றுக் கொண்டேன்.

அதில் நன்கு பழகிய பிறகு என்னுடைய அளவிற்கு ஏற்ப தைக்க ஆரம்பித்தேன். தையல் தவிர சின்னச் சின்ன அழகிய கலைநயமிக்க கைவினைப் பொருட்களும் செய்ய துவங்கினேன். நான் செய்ததை மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் செய்தேன். என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என் கையால் செய்த கைவினைப் பொருட்களை பரிசாக தரும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சாஃப்ட் டாய்ஸ், செயற்கை நகைகள், தேங்காய் ஓடு கிராஃப்ட்…

ஒருமுறை புத்தக கண்காட்சிக்கு ேபான போது, அங்கு சாஃப்ட் டாய்ஸ் தயாரிப்பு முறை குறித்த புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். அதில் பட விளக்கத்துடன் எளிதாக புரியும் படி இருந்தது. அதை வாங்கி பார்த்துதான் நான் தைக்கவே பழகிக் கொண்டேன். இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை பலர் என்னிடம் இருந்து விரும்பி பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அதையும் செய்ய துவங்கினேன். அதற்கான மூலப் பொருட்கள் வாங்க செல்லும் இடத்தில் தான் செயற்கை நகைக்கான மூலப் பொருட்கள் இருப்பதை கவனித்தேன். அதில் ஆர்வம் ஏற்பட ஆர்டிபிஷியல் நகைகளையும் செய்ய துவங்கினேன்.

கலைப் பொருட்கள் பொம்மைகளை விட டிசைன் நகைகளை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அதனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான காதணிகள், ஆரம், நெக்லஸ் போன்றவற்றை அவர்களின் விருப்பம் மற்றும் உடைக்கு ஏற்ப செய்து கொடுக்க துவங்கினேன். தங்கம் விற்கும் விலைக்கு இது போன்ற நகைகளை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கி அணிந்து அழகு பார்க்கலாம் என்பதால், பலரும் இதையே விரும்புகிறார்கள்.

இவை தவிர தேங்காய் ஓடுகள் கொண்டும் அழகிய கலைப் பொருட்களை வடிவமைக்கிறேன். முதலில் தேங்காய் ஓடுகளை நமக்குத் தேவையான வடிவில் வெட்ட வேண்டும். பிறகு அதனை எமரி பேப்பர் கொண்டு தேய்க்க வேண்டும். இதன் மூலம் தேங்காய் ஓடு மிகவும் வழுவழுப்பாக மாறும். அதில் மீன், ஆமை, பென்குவின், ஃப்ளவர் வேஸ் என நாம் விரும்பும் டிசைன்களில் வடிவமைக்கலாம்.

சுய உதவிக்குழுவினருக்கான வகுப்புகள்…

நான் செய்த நகைகள், சாஃப்ட் பொம்மைகள், ஐஸ்கிரீம் குச்சிகள் கொண்டு செய்த இரவு விளக்கு, பேனா ஸ்டாண்ட், துளசி மாடம், குத்து விளக்கு, இன்னும் பல மினியேச்சர்கள், பேப்பர் நகைகள், இவைகளை பார்த்து பெண்களை தொழில்முனைவோராக்கும் மத்திய அரசு நடத்திய (jan shikshan sansthan) நிறுவனத்தில் பகுதி நேரமாக பணி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படித்தான் எனக்கு தெரிந்த கலையினை நான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன்.

கொரோனா காலத்திற்குப் பிறகு செயற்கை நகைகள், பேப்பர் கிராஃப்ட், வால் ஹாங்காங், ஆரத்தி தட்டு, பானையில் பெயின்டிங், தேங்காய் ஓட்டில் கிராஃப்ட், கிளாஸ் பெயின்டிங் போன்றவற்றை செய்து வருகிறேன். இவை அனைத்தும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் பயிற்சி அளிக்கிறேன். மேலும் நாம் செய்யும் பொருட்களை சமூக வலைத்
தளங்களில் பதிவு செய்யும் போது, அதற்கான வரவேற்பு நன்றாக இருக்கிறது.

உலகளவில் நம்முடைய பொருட்களை கொண்டு செல்ல இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தக் கலையை என்னோடு நிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர விரும்பினேன். அதன் அடிப்படையில்தான் நான் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.

எதிர்கால திட்டம்…

நம் கற்பனையில் உதிக்கும் எளிய பொருட்களை அழகாக மாற்றி அமைத்தாலே அதுவே நமக்கு ஒரு வருமானத்தை கொடுக்கும். இது போன்ற பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் அதற்கான விற்பனை மற்றும் வருமானத்தை இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளம் ஏற்பாடு செய்து தருகிறது. நம்முடைய பொருட்கள் குறித்து அதில் பதிவு செய்தால் போதும், பொருட்கள் தரமாக இருந்தால் கண்டிப்பாக நம்மைத் தேடி வருவார்கள். வாடிக்கையாளர்களை சம்பாதித்து விட்டால் போதும் அதன் பிறகு அவர்
களின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் வடிவமைத்து தரலாம். இதன் மூலம் உங்களின் விற்பனை அதிகரிக்கும்.

சில சொந்த காரணங்களால் என்னால் இதில் ஈடுபட முடியவில்லை. தற்போது மீண்டும் முழு மூச்சாக இதனை ஆரம்பிக்க இருக்கிறேன். எனது கற்பனைத் திறனுக்கு சவால்விடும் வகையில் நிறைய புதிய பொருட்களை உருவாக்க இருக்கிறேன். மேலும் இந்தக் கலையை நிறைய பெண்களுக்கு சொல்லித்தர வேண்டும். அதற்கான செயல் வடிவம் செய்து வருகிறேன். இது அதிக செலவற்ற லாபகரமான தொழில். பெண்கள் வீட்டிலிருந்தே தங்கள் கையில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு, கற்பனைத் திறனை புகுத்தி இந்தத் தொழிலில் துணிந்து இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறலாம். கொஞ்சம் ஆர்வமுடன், ஆகச்சிறந்த கற்பனைத் திறனும், கைத்திறனும் மட்டும் போதும் நம்மால் நிறைய சாதிக்க முடியும்’’ என்கிறார் கிரேஸி இருதயராஜ்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

 

The post ஆர்வம் கற்பனைத் திறன் இருந்தால் சாதிக்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: