உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

சகோதர, சகோதரி பந்தம்!

ஆயிரம் உறவுகள் நமக்கு இருந்தாலும், உடன் பிறப்புகள் இல்லாமல் தனித்து வளரும் குழந்தைகள் பாடு மிகவும் சிரமம்தான். அதனால்தான் நம் முன்னோர்கள், பிள்ளைகள் துணையோடு வளர வேண்டும் என்பதற்காகவே இரண்டு, மூன்று பிள்ளைகளாவது இருக்க வேண்டும் என யோசித்தார்கள். குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவும், படிக்க வைக்கவும், பெண்களாகயிருந்தால் திருமணம் செய்து தரும் வசதி உள்ளதா என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இயற்கையில் அனைத்தும் வளர்வது போல பிள்ளைகளும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார்கள். குழந்தைப் பருவத்தில் அண்ணன்-தம்பி சண்டை, அக்காள்-தங்கை சண்டை என அனைத்தும் நடைபெறும்.

ஆனால், அவற்றை பெரியோர்கள் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். விட்டுக் கொடுக்கும் தன்மை ஒட்டிக் கொண்டது. பெரிய பிள்ளைகள் சிறியவர்களை புரிந்து நடந்து கொள்வதும், பாசப் பிணைப்பை வெளிக்காட்டுவதும் அந்தந்த நேரங்களில் இயல்பாகவே கற்றுக்கொள்ள முடிந்தது. புரியாத வயதில் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டாலும், வளரும்போது ஒருவரைப் பற்றிய அக்கறை மற்றவனுக்கு ஏற்படுவதும் சகஜமாக அமைந்தது.

அக்கா, தங்கைகளும் ஒருவருக்கொருவர் உயிரையும் கொடுக்கத் தயார் என்பது போல வளர்ந்து விடுவார்கள். குடும்பத்தில் ஒரு அக்கா இருந்துவிட்டால், அவள்தான் அடுத்த அம்மா போன்றும், ஒரு அண்ணன் இருந்துவிட்டால் அடுத்த அப்பா போன்றும் நடந்து கொள்வதுதான் நம் கலாச்சாரத்தை இணைக்கும் பாலம் எனலாம். ஒரே மாதிரி முக ஜாடை கொண்ட அண்ணன், தம்பிகளோ, அக்கா-தங்கைகளாகவோ இருந்துவிட்டால், அவர்களின் பிள்ளைப் பருவம் மிகவும் குதூகலிக்கத்தான் செய்யும். இரட்டையர்களாக இருந்துவிட்டால் மேலும் கும்மாளம் தான்.

இரட்டை சகோதரர்கள் வாழ்வில் ருசிகரமான நிகழ்வுகள் ஏற்படும். இருவரில் ஒருவன் மதிப்பெண்ணில் நூற்றுக்கு நூறாம். மற்றொருவன் விளையாட்டுத் தனமாக நடந்து கொள்வானாம். இருவர் முகஜாடையில் ஆசிரியருக்கு எப்பொழுதும் குழப்பம் வருமாம். நூற்றுக்கு நூறு வாங்கியவனை பாராட்டுவதற்கு பதில், மற்றொருவனை அழைத்து கைதட்டி பாராட்டுவாராம். பிள்ளைகளையெல்லாம் கைதட்டி பாராட்டச் செய்வாராம்.

தப்பு தப்பாக செய்து குறைந்த மதிப்பெண் பெற்றதாக நினைத்து, நூறு மார்க் வாங்கியவனை திட்டித்தீர்த்து, பொதுவில் அவமானப்படுத்துவாராம். ‘பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்’ என்பார்களே அதுதான் முகஜாடை ஒன்றாக இருந்ததால் ஏற்பட்ட விபரீதம்! பிள்ளைகளின் கேலி, கிண்டல்கள் ஒருபுறம் இருக்க, வீட்டை சென்றடையும் பொழுது அது பல குடும்பப் பிரச்னைகளை ஏற்படுத்தியதாம். உழைத்து வெற்றி பெற்றவன் மனதளவில் பாதிக்கப்பட, மற்றொருவனோ ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பானாம். குடும்பத்தையே கலக்கும் அளவுக்கு ஒரே முகஜாடை கொண்டவர்களின் வாழ்க்கை உண்மையிலேயே வினோதமாக இருக்கும்.

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை பாசம்தான் விவரிக்க இயலாதது என்று நினைத்திருக்கும் நமக்கு உருவ ஒற்றுமைகள் மேலும் வியப்பைத் தந்து உடன் பிறப்பின் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது எனலாம். கல்லூரியில் பணிபுரிந்த பெண் கை நிறைய சம்பாதித்து வந்தாள். ஆனாலும் அவளுக்கு, தன் தங்கைகளின் வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் சுமையாக இருந்ததால், தன்னைப் பற்றி யோசிக்கவே மாட்டாள். சிறு வயதிலேயே அவளின் தாய் கணவனை இழந்ததால், சமையல் வேலைகள் செய்து, நான்கு பெண் குழந்தைகளை படிக்க வைத்தாள்.

பெரியவள் கல்லூரி வேலைக்குச் சென்றதும், குடும்ப பாரத்தை அவள் சுமக்க ஆரம்பித்தாள். தனக்கு அடுத்த மூன்று தங்கைகளுக்கும் அவரவர் தகுதிக்கேற்ற பையனை தேர்ந்தெடுத்து திருமணம் முடித்து வைத்தாள். ஒவ்வொரு சகோதரியும் இரண்டு வயது வித்தியாசத்தில் இருந்ததால், நான்கு ஆண்டுகளுக்குள் மூவருக்கும் கடன் வாங்கி திருமணம் செய்தாள். அதன் பின் ஒரு கடையில் வேலை பார்த்தவரைதான் திருமணம் செய்து கொண்டாள்.

அவளுடைய படிப்பிற்கும், வேலைக்கும் ஏன் ஒரு நல்ல வரனை பார்த்திருக்கக்கூடாது என அனைவரும் கேள்வி கேட்டனர். ஆனால் அவளோ, தன் தங்கைகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு தாயாக நல்லது கெட்டது செய்ய வேண்டும், அதற்கு தனக்கு உறுதுணையாக அமையும் கணவன் போதும் என கேட்பவருக்கு விளக்கினாள். தாய்க்குப் பின் தாரம் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அவள் தாயாகவும் தந்தையாகவும் குடும்பத்தைக் காப்பாற்றினாள்.

மற்றொரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்ததாம். அந்தப் பெண்ணின் குடும்பத்தில் பரம்பரையாக ஆண் வாரிசே கிடையாதாம். அதனால் அடுத்து ஒரு ஆண் குழந்தைக்காக வேண்டினார்களாம். பதினோரு ஆண்டுகள் கழித்து கர்ப்பம் தரித்தார் அந்தப் பெண். அந்த கரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று வேண்டினாலும், கடவுளின் சித்தம் என்னவோ அதுதானே நமக்குக் கிடைக்கும். அக்குழந்தையும் அழகிய பெண் குழந்தைதான்.

முதல் பெண் ஆறாம் வகுப்பைத் தாண்டிவிட்டாள். அனைத்தையும் தானே பொறுப்புடன் செய்ய ஆரம்பித்தாள். இரண்டாவது குழந்தை அதிக வயது வித்தியாசத்தில் இருந்ததால், அதிக நெருக்கம் இல்லாமல் வளர்ந்தாள். பார்த்த பெரியவர்களுக்கும் கொஞ்சம் கவலை ஒட்டிக் கொண்டது. பெரியவள் கல்லூரி முடிக்கும் சமயம் சிறியவள் ஆரம்பப் பள்ளியில் இருந்தாள். பெரியவள் உத்தியோகத்திற்கும் செல்ல ஆரம்பித்தாள். திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்த நேரம், வெளிநாட்டு வரன் அமைந்தது. ஆனால் அவள் முதலில் பிரியும் குடும்ப அங்கத்தினராக யோசித்தது தன் தங்கையைதான். அந்த நொடி முதல் தங்கையை தன் குழந்தை போல் நினைக்க ஆரம்பித்தாள்.

அதிக வயது வித்தியாசம் ஏற்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சமயம் வரும்பொழுது அக்கா-தங்கை பாசம் என்பது ஒப்பிட முடியாத வகையில் ஒட்டிக் கொள்கிறது. கொரோனா சமயத்தில், தங்கையின் திருமணம் நடந்ததால் வர இயலாத நிலையில் அனைத்தையும் நேரலையில் கண்டுகளித்து, தங்கையின் ஒவ்வொரு சடங்கையும் ரசித்தாளாம். உடன் பிறந்தவள் ஒவ்வொருவருக்கும் உலகின் சிறந்த உறவாக காணப்படுகிறாள்.

குழந்தைப் பருவத்தில் அடிக்கடி சண்டையிட்டு அடம் பிடிப்போம். பேனா, பேப்பர் எடுத்தால் சண்டை, தின்பண்டங்களுக்கு சண்டை. ஒரு பழம் கூட ஒரே அளவில் இருக்க வேண்டும். ஒற்றைப் பின்னலுக்கு சிறிய பூச்சரம். இரட்டைப் பின்னலுக்கு மட்டும் தங்கைக்கு இரண்டு பின்னலுக்கும் ‘பூவா’ என்று எதிலும் ஒருவருக்கொருவர் சண்டைதான். ஆனாலும் ஓடிவந்து பேசும் அன்பிற்கு பஞ்சமேயில்லாததுதான் அக்கா, தங்கை உறவு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத பாசம், உண்மையான நேசம் உயிர்த் தோழியாகவும் காட்டக்கூடியது. ஒன்றாக வளர்ந்தால் அல்லது சகோதரிகள் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்தால், அந்த இடம் சொர்க்க பூமி போல் இருக்கும்.

ஒன்றாய் வாழ்ந்த நாட்கள், ஒன்றாக உறங்கிய நாட்கள் மறக்க முடியாதது. தங்கை, அக்கா மேல் கால் போட்டு தூங்குவதும், அக்கா அவளை அணைப்பதும் என்றுமே மாறாதது என்றுதான் கூறவேண்டும். திருமணம் முடிந்து மற்றொரு வீட்டிற்குச் சென்ற பின்னும், அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று நினைக்கத்தான் தோன்றும். இருவர் இரு மூலைகளில் வசித்து வந்தாலும், வசதியுடன் வாழ்ந்தாலும் முதல் உறவாய் மனதில் நிற்பது உடன் பிறப்புகள்தான். நினைவிலும், கனவிலும் நம்மை எழுப்புவது ஒன்றாக வாழ்ந்த காலங்களின் நினைவுதான்.

பொதுவாக, நாம் தாய், தந்தையை பற்றி ெசால்லும் பொழுது, “அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், நீங்கள்தான் என் தாய், தந்தை” என்போம். அப்படிப்பட்ட புனித உறவுகள் கூட இன்று ஒரே வீட்டில் தனித்தனி அறையில் இருந்து கொண்டு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறோம். வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம். அக்கா-தங்கை, அண்ணன்-தம்பி, அக்கா-தம்பி, அண்ணன்-தங்கை உறவுகளும் அவ்வளவு புனிதமானவை. வசதிகள் மட்டும் வாழ்க்கையில்லை. உறவுகள்தான் உடன் வரும். அவர்களுடன் மகிழ்வோம்!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Related Stories: