நான் வன இளவரசி

நன்றி குங்குமம் தோழி

என் சுற்றத்தார்
எல்லோரும் தேயிலைக்
கூடையைத் தூக்கிக்கொண்டு
மலைச்சரிவுகளில்
இறங்குகையில் – நான் மட்டும்
சொற்கூடையைத் தூக்கிக்கொண்டு
மலைச்சரிவுகளில் ஏறினேன்.
காடு என்ற ஒற்றைச் சொல்லைதான்
அந்த கூடையில் பறித்துப் போட்டேன்.
அந்த கூடை சொற்களால் நிரம்பிவிட்டது…
இது நிவிதாவின் கவிதை.

ஒவ்வொரு கவிதை முடிவிலும் தன்னை ‘வைல்ட் பிரின்சஸ்’ எனக் குறிப்பிடும் நிவிதா, தன் முகநூல் பக்கம் முழுவதும் தன் உணர்வுகளை கவிதைகளால் வடித்திருக்கிறார். எனக்கு ஊர் மாஞ்சோலை என முகமெல்லாம் புன்னகைக்கும் நிவிதா, மாஞ்சோலையின் மலை முகடுகளுக்கு நடுவே அழகான வன தேவதையாக மிளிர்கிறார். மலையும் மலை சார்ந்த அவரின் வாழ்வு குறித்தும், அவர் இழந்து நிற்கும் மாஞ்சோலை வாழ்க்கை குறித்தும் பேசியதில்…

‘‘மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, குதிரை வெட்டி, ஊத்து, கோதையாறுன்னு 5 எஸ்டேட் இருக்கு. இதை 2ம் காடு, 4ம் காடு, 6ம் காடு, 8ம் காடு, 9ம் காடுன்னு காடு காடா பிரிச்சுருப்பாங்க. காக்காச்சிதான் இருக்கிறதுலே உயரம். 3500 அடி. அங்கு குளிர் அதிகமாக இருக்கும். தோட்ட வேலைக்கு போறவுக வேப்பெண்ண, உப்பு, தீப்பெட்டியோடதான் போவாக. காரணம், அட்டைபூச்சிக்கடி அதிகம்’’ என நெல்லை தமிழ் மாறாமல் ரசிக்க ரசிக்க, குதூகலம் பொங்கப் பேசுகிறார் நிவிதா.

‘‘50 ரூபாய் கூலி உயர்வுக்காக தாமிரபரணி போராட்டத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பிறவு பிறந்தவ நான். சின்ன உசுறாவது பொழைச்சுக்கட்டுமேனு கரையில விட்டெறிஞ்ச குழந்தைய பிடிச்சு மறுபடியும் காவல்துறை ஆத்துக்குள்ளாற போட்ட நிகழ்வெல்லாம் போராட்டத்தில் நடந்திருக்கு. என் அம்மை, ஆச்சி எல்லாம் அந்தப் போராட்டத்தில் பங்கேற்று
தப்பி பிழைச்சு வந்தவுகதான்’’ என்கிற நிவிதாவுக்கு உடன் பிறந்தது இரண்டு அக்காவாம்.

‘‘அடுத்தடுத்து பொம்பளை பிள்ளையா பிறந்ததால், என் பிறப்பை வீட்டில் யாரும் பெரிசா கொண்டாடல. ஒரு சாதாரண நிகழ்வா, அவரவர் வேலையை பார்க்க கிளம்பிப் போயிட்டாகளாம். பெற்றோர் காலை 7 மணிக்கே எஸ்டேட் வேலைக்கு கிளம்ப, அங்கன்வாடி, பால்வாடின்னுநான் வளர்ந்தேன்.

1928 ஜமீன் காலத்தில் வெள்ளைக்காரங்க, தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்(BBTC) நிறுவனத்திடம், 100 ஆண்டு குத்தகைக்கு காடாக் கிடந்த மாஞ்சோலைய ஒப்படைச்சுருக்காங்க. 2028ல் குத்தகைக் காலம் முடிவதால், முன்பிருந்த மாதிரியே மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டை காடாக்கி திரும்பக் கொடுக்கணும் என்பது குத்தகை ஒப்பந்தம். அதனால எஸ்டேட்ட நம்பி நான்கு தலைமுறையாக வாழ்ந்த எங்களை வெளிய அனுப்ப முடிவு செஞ்சுட்டாக.

காட சீரமச்சு எஸ்டேட்டா மாற்ற, எங்க ரத்தத்தையெல்லாம் உழைப்பா உறிஞ்சுன பிறகு, இன்னைக்கு இந்த ஊரைவிட்டு போன்னா, நாங்க எங்க போவோம்? ஒரு காட்டை தேயிலை எஸ்டேட்டா மாற்ற என் மூதாதையர், எனது பெற்றோர் எல்லாம் எவ்வளவு உழைப்ப செலுத்தியிருப்பாக. மழை… குளிர்… வெயில்னு.. மலையில செங்குத்தா ஏற இறங்கனு, பாம்பு, கரடி, காட்டெருமை, புலி, யானைன்னு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாக. எத்தன மக்கள் அந்த மலையில் தடுமாறி விழுந்து செத்துருப்பாக?’’ நிவிதாவிடம் இருந்து ஆற்றாமையும் துயரமும் அடுத்தடுத்து வெளிப்படுகிறது.

‘‘குத்தகை காலத்திற்கு முன்பே பிபிடிசி கம்பெனி மூடப்பட்டதால், எங்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு இல்ல. எங்களுக்கு வாழ்வாதாரம் அமைச்சு தரும்வரை அங்கிருந்து கிளப்ப வேண்டாம்னு நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு. சிறு வன மகசூல் எதையாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம். ஆளுக்கு 2 ஏக்கர் பட்டா உறுதி செய்து கொடுக்கணும் என 2006 வன உரிமை சட்டம் சொல்லுது. பொதுநல வழக்கு, மனித உரிமை கமிஷன்னு வழக்குகள் இருக்கு.

மாஞ்சோலைய சுற்றுலாத் துறையாக அரசு அறிவித்தாலும், நாங்கள் அங்கிருப்பதால் என்ன பிரச்னை? நான் பிறந்து… வளர்ந்து… விளையாண்ட மண்ணு இது. இன்னைக்கு புதர் மண்டி, களை அடிச்சு, பாம்புகளின் வாழ்விடமா கிடக்குறத பார்க்க கண்ணீரு முட்டிக்கிட்டு வருது.” தான் பிறந்து படித்து வாழ்ந்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதின் பரிதவிப்பும்… வலியும் நிவிதாவின் வார்த்தைகளில் தெரிக்கிறது.

‘‘சுத்தி முத்தி அது காடுதான். எங்களால் விலங்குகளுக்கோ, விலங்குகளால் எங்களுக்கோ எந்த தொந்தரவும் இல்லை. அம்மா, அப்பா எஸ்டேட் வேலைக்கு போயிருவாக. நாங்க பள்ளிக்கூடத்தில் இருப்போம். மின்சாரம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சின்னு எதுவும் அங்கில்லை. ஆனாலும் சந்தோஷமா வாழ்ந்தோம். ஐந்து வரை பிபிடிசி நிறுவன பள்ளியில்தான் படிச்சேன். 6ல் இருந்து 10 வரை அங்கிருந்த அரசுப் பள்ளியில் படிச்சேன்.

சிலபஸ் தாண்டி சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள். என்னோட ஆங்கில ஆசிரியர் சுஜின் பிரபு சார். எப்போதும் புத்தகத்தோடுதான் பள்ளிக்கு வருவார். அவர் கொண்டு வருகிற புத்தகத்தை எட்டி எட்டிப் பார்ப்பேன். ஆங்கில அகராதிய எப்படி பயன்படுத்தணும்னு அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். 6வது படிக்கும் போதே புத்தக வாசிப்பில் ஆர்வம் வந்தது. என் மாமா ஒருவர் தமிழ் இலக்கியம் படித்து அரசு வேலையில் இருக்கிறார். அவர்தான் எனக்கு ‘இதைப் படி… அதைப் படி’ எனச் சொல்லும் வழிகாட்டியாக இப்போதும் இருக்கிறார்.’’ யதார்த்தம்… தெளிவு… அறிவு… நெல்லைத் தமிழ் என அகத்தின் அழகு நிவிதாவின் முகத்திலும், பேச்சிலும் அப்பட்டமாய் வெளிப்படுகிறது.

‘‘என்னோட பெரிய அக்கா மெக்கானிக்கல் இஞ்சினியரிங்ல டிப்ளமோ முடிச்சாக. இரண்டாவது அக்கா ஆசிரியர் பயிற்சி எடுத்தாக. ஆனால் என்ன செய்ய, வேலைக்கு போறதுக்கு முன்னாடியே வீட்ல கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாக. படிச்சும் வேலைக்கு போகாம இருக்காங்களேன்னு எனக்கு வருத்தமா இருந்துச்சு. இந்த நிலை எனக்கும் வந்துறக்கூடாதுனு தெளிவா இருக்கேன். இந்த மாப்பிள்ளைய உனக்கு புடிச்சுருக்கா? கல்யாணம் பண்ணிக்க நீ ரெடியானு கேட்காமலே பெண் பார்க்க வருவதெல்லாம் எத்தனை பிற்போக்குத்தனம்…’’ யதார்த்தமாய் கேள்வி கேட்கும் நிவிதா, படிச்சு முடிச்சு வேலை பார்த்து நாலு காசைப் பார்த்த பிறகுதான் திருமணம் என்பதில் உறுதி காட்டுகிறார்.

‘‘மாஞ்சோலையில் 10 முடிச்சதும், திருநெல்வேலி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் +2 படிச்சேன். தமிழ் மீது தீராக் காதல் இருந்ததால், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதைன்னு மேடை ஏறுவது, முதல் பரிசோடு வருவதுமாக இருப்பேன். படிப்பும் நன்றாக வந்தது. திருநெல்வேலி செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படிக்க ஆசைப்பட்டேன். அது ஆண்களும் படிக்கும் கல்லூரி. என்பதால், பெண்கள் மட்டுமே படிக்கும் சாரா டக்கர் கல்லூரியில் பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரச்சர் படியென அப்பா சேர்த்தார். அப்போது அப்பாவை எதிர்க்க முடியாமல் பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடிச்சு எம்.எஸ்.டபிள்யூ படிச்சேன்.

காரணம், மலைவாழ் மக்களையும், அவர்களின் வாழ்வியலையும் பாதுகாக்கணும் என்பது என் விருப்பமாக இருந்தது.கொரோனா நேரத்தில் முகநூலில் “திவ்யா ஈசன்” என்ற பெயரில் கவிதை எழுத ஆரம்பித்து, கவிஞர்கள் கலா ப்ரியா, வண்ணதாசன், மனுஷ்ய புத்திரன், யுகபாரதி, மௌனன் யாத்திரியாக, வெயில், கவிஞர் இசை, திறனாய்வாளர் அ. இராமசாமி போன்றவர்களிடத்தில் என் கவிதை… என் வட்டார மொழி… என்னோட வெளிப்படையான எள்ளல் பேச்சு… இதெல்லாம் நல்ல நட்பை உருவாக்கித் தந்தது. கவிதை உலகில் இவர் பெரிய ஆளு.. இவர் சின்ன ஆளு என்றெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. மனசில் என்ன நினைக்கிறனோ அதை அப்படியே பேசிருவேன். இப்படித்தான் இந்தக் கவிதை உலகம், இருகரம் கொண்டு என்னை ஆரத் தழுவியது’’ என்கிறார் நிவிதா.

‘‘ஒருமுறை கவிஞர் மனுஷ்ய புத்திரனை நான் எப்படி என் ஊருக்கு அழைத்துச் செல்வேன் என்பதை “மலையேற்றம்” என்கிற தலைப்பில் கவிதையாக்கினேன். “என் வாழ்நாளுக்கு இந்த கவிதை போதும். விருது எதுவும் தேவையில்லை” என்றார் அவர்.கவிஞர் கலாப்ரியா அவர்களின் உதவியில் எனக்கு ரொம்பவும் பிடித்த செயின்ட் சேவியர் கல்லூரியில் தற்போது எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்து வருகிறேன். என் மாஞ்சோலை வாழ்வியலை பி.எச்.டி. செய்யும் ஆசையும் இருக்கு’’ என்கிற நிவிதா, ‘‘மாஞ்சோலையில் என் வாழ்வு எளிமையா… அழகா இருந்தது. மாஞ்சோலை வாழ்வு குறித்து ஓராயிரம் கதைகளும்… கவிதைகளும் என்னிடத்தில் இருக்கு. ஏனெனில் நான் இயற்கை விரும்பி’’ என்றவாறு வன இளவரசி நிவிதா நம்மிடம் விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: பரமகுமார்

The post நான் வன இளவரசி appeared first on Dinakaran.

Related Stories: