ஐதராபாத்: புச்சி பாபு சனா இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ராம் சரண் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘பெத்தி’. இதில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் நடித்துள்ளனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் ஜூன் 4ம் தேதி வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, தோனி ஆகியோர் குறித்து ராம் சரண் ஒரு வரியில் பதில் சொன்னார். அந்த வரிசையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை, கால்பந்து வீரர் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலாகி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மாற்றி சொன்னதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு ராம் சரண் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: சில நேரங்களில் எனக்கு பெயர்கள் நிஜமாகவே மறந்துவிடுகிறது. ஜஸ்பிரித் பும்ரா ஜி, இந்த குளறுபடிகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். ஒட்டுமொத்த கூட்டத்துக்கு மத்தியில் ஏற்பட்டுவிட்ட ஒரு சாதாரண மனித தவறு இது. எனக்கு உங்கள் மீது அதிக மரியாதை இருக்கிறது. நான் உங்களுடைய விளையாட்டுக்கு தீவிரமான ரசிகன். நீங்கள் தொடர்ந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் போது, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட செய்கிறீர்கள்.
