சென்னை: மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர் கிட் சாந்தேவின் ‘நா வேற லெவல்’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பார்த்திபன் ரவி, சோனி மியூசிக் ரேவதி மாரியப்பன் பங்கேற்றனர். மலேசியாவில் பிரபலமான தமிழ் ஹிப்-ஹாப் இசையில் கொண்டாடப்படுபவர், கிட் சாந்தே. தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி ஆகிய மொழிகளை கலந்த ராப் ஸ்டைல் அவருடைய தனிச்சிறப்பு. பாடல் குறித்து கிட் சாந்தே பேசியதாவது: தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இதை உருவாக்கினேன்.
தினமும் மக்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள்தான் அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதல்முறை வந்தபோது, எனது கார் பஞ்சராகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய தருணமே இப்பாடலின் முழு கருத்தாக மாறியது. ‘நா வேற லெவல்’ என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள்தான். அவர்களுக்கான மரியாதையும், அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்பாடலை சோனி மியூசிக் யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.
