மாட்ரிட்: டொவினோ தாமஸ் ஜோடியாக நஸ்ரியா நடித்திருக்கும் புதிய படம் ‘கிரேசியாஸ் எல் கிளாசிகோ’. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கேம்ப் நவ் என்கிற கால்பந்து மைதானத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது கால்பந்து போட்டி நடந்து வந்தது. இப்படத்தின் கதை கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள கால்பந்து கலாச்சாரத்தையும், உலகப்புகழ் பெற்ற ஸ்பானிஷ் கால்பந்து ரசிகர் ஒருவரின் மனநிலையையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ளதாம்.
மலையாள சினிமா வரலாற்றில் ஒரு சர்வதேச கால்பந்து மைதானத்தில் ஒரு படத்தின் டைட்டில் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். முஷின் பெராரி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இவர் கடந்த 2015-ல் வெளியான கே.எல் 10 என்கிற படத்தை இயக்கியவர். 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
