கர விமர்சனம்

திருட்டு தொழிலில் கைதேர்ந்த தனுஷ், காதலி மமிதா ைபஜுவை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக, கடைசியாக ஒருமுறை திருட செல்கிறார். அங்கு போலீசில் சிக்குகிறார். அவர் மீது மேலும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, அதிகபட்ச தண்டனை கிடைக்க செய்ய போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடு முயல்கிறார். அப்போது அவரை தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிக்கும் தனுஷின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே மீதிக் கதை.

படத்தின் ஆரம்ப காட்சியே திரில்லுடன் தொடங்குகிறது. பிறகு எமோஷனல் மோடுக்கு செல்கிறது. மீண்டும் திரில்லர் ரூட்டுக்கு திரும்பும்போது ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார வைக்கிறது ரைட்டர்கள் அல்ஃபிரட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜாவின் எழுத்து. ‘போர் தொழில்’ படத்துக்கு பிறகு இந்த படத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. கரசாமியாக வரும் தனுஷ், ஆரம்ப காட்சியிலேயே அரச வைக்கிறார்.

தந்தை கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு, பார்க்காதது போல் நிற்பது, காதலி மமிதாவின் நிலையை பார்த்து கலங்குவது, திருட வந்த இடத்தில் நண்பன் செய்யும் துரோகத்தை பார்த்து அதிர்வது, தந்தைக்காக மீண்டும் போலீசுக்கு சிம்மசொப்பனமாக அமைவது என அடிப்பொலி ஆட்டம் ஆடியிருக்கிறார் தனுஷ். மமிதா பைஜுவின் புது லுக் மட்டுமல்ல, அவரது கேரக்டரும் புதிதாக இருக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை பார்க்காத ஒரு அளவுகோலில் தனது ஆழமான நடிப்பை தந்துள்ளார். ஆடு புலி ஆட்டத்துக்கு ஈடு தரும் போலீசாக சுராஜ் வெஞ்சரமூடு, மோசடி வங்கி பேர்வழி ஜெயராம், நண்பராக வரும் பிரித்வி பாண்டியராஜன், கருணாஸ், ஸ்ரீஜா ரவி என அனைவரும் கச்சிதம்.

முதல் பாதியில் சில இடங்களில் கத்தரி போட்டு நீளத்தை குறைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி ஜம்ப் ஆகி திடீரென வருவது போல் இருப்பதை கவனித்திருக்கலாம். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துடன் பயணிக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜீத் சாரங்கின் எடிட்டிங் விறுவிறுப்பை கூட்டுகிறது. தனுஷும் விக்னேஷ் ராஜாவும் இணைந்து சம்மருக்கு ஏற்ற சம்பவம் செய்திருக்கிறார்கள்.

Related Stories: