சென்னை: கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள ‘29’ திரைப்படத்தை ஒயிட் கார்ப்பேட் பிலிம்ஸ் கே.விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் ஒயிட் கார்ப்பேட் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த ‘தேஜாவு’ திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான ‘வித்தைக்காரன்’ படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது.
அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், கர்நாடகாவில் அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் தமிழகமெங்கும் ‘ஆர் யூ ஓகே பேபி’ போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. ‘29’ படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார்.
கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மே 8ம் தேதி ரிலீசாகிறது.
