சென்னை: ‘சர்தார்’, ‘லப்பர் பந்து’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மன் குமார், மேவரிக் மூவிஸ் சார்பில் வினீத் ஜெயின் இணைந்து தயாரித்துள்ள படம், ‘மிஸ்டர் எக்ஸ்’. வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். திபு நைனன் தாமஸ் இசை அமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 17ம் தேதி திரைக்கு வரும் இதில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் நடித்த ‘எப்ஃஐஆர்’ என்ற வெற்றிப் படத்தை எழுதி இயக்கிய மனு ஆனந்த் இதை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது சரத்குமார் பேசுகையில், ‘‘நமது நாட்டை பாதுகாக்க வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக பணியாற்றுவது யாருக்கும் தெரியாது. அதை வெளியே சொல்லவும் முடியாது. தன் மனைவிக்கு கூட யார் என்ற உண்மையை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட முகம் தெரியாத சில ஹீரோக்களை பாராட்ட வேண்டும் என்றால், இதுபோன்ற படங்களின் மூலம்தான் பாராட்ட முடியும்’ என்றார். மஞ்சு வாரியர் பேசும்போது, ‘‘ஸ்பை படங்களில் இது வித்தியாசமாக இருக்கும்’’ என்றார்.
