நயன்தாரா, லலித் குமார் இணைந்து தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், மாளவிகா, யோகிபாபு, கவுரி கிஷன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய கவுரி கிஷன் இப்படத்தில் முதல் முறையாக கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‘‘இந்த படம் எங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் சிறப்பு வாய்ந்தது. இப்படம் எங்கள் எல்லோருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் பொறுமை. இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால், அதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். முதல் முறையாக இப்படத்தில் கல்கி என்ற ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
அந்த வேடத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய நன்றி. முதலில் எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. ‘சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?’ என்று அவரிடம் கேட்டேன். எனது வசதியான ரோல்களில் இருந்து வெளியே வர வேண்டும் என்று விக்னேஷ் சிவன் விரும்பினார். ஒரு இயக்குனரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது மிகவும் முக்கியமானது. இதுவரை என்னை ஜானுவாக அனைவரும் பார்த்திருக்கிறார்கள். இதில் வேறு விதமாக என்னை பார்ப்பார்கள்’’ என்று தெரிவித்தார்.
