×

காக்கி சர்க்கஸ் வெப்தொடர்: விமர்சனம்

குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் இடம் ஜெயில் கிடையாது; அவர்களை திருத்துவதற்குத்தான் ஜெயில் என்ற கொள்கையை தீவிரமாக பின்பற்றும் சிறை கண்காணிப்பாளர், முனீஷ்காந்த். அவருடன் சுபாஷ் செல்வம் சிறை காவலராக பணியாற்றுகிறார். ஜெயிலை ஒரு மினி நூலகமாக மாற்றிய முனீஷ்காந்த், குற்றவாளிகளுக்கு தான் எழுதிய புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்கிறார். இதன்மூலம் அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறார். இந்நிலையில், சப்-ஜெயிலில் இருக்கும் கோயிலில் வைத்திருந்த உண்டியலில், லட்சக்கணக்கான ரூபாய் காணாமல் போகிறது.

வெளியே தெரிவதற்குள் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழ்நிலையில், வங்கியில் லோன் மூலம் கிடைத்த பணத்தை உண்டியலில் நிரப்பும் சுபாஷ் செல்வம், திருடன் யார் என்று கண்டுபிடிக்கிறார். அவனோ, தன்னை பிடிக்க முடியாது என்று சவால் விடுகிறான். பிறகு நடப்பது, கணிக்க முடியாத கிளைமாக்ஸ். வித்தியாசமான காமெடி, அதிரடி சண்டை, திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த வெப்தொடர், ஏழு எபிசோடுகள் ஓடுகிறது. நியாயமான சிறை கண்காணிப்பாளராகவும், குற்றவாளிகளை திருத்துவதில் அதிக கவனம் செலுத்தும் எழுத்தாளராகவும், இயல்பான குணச்சித்திர நடிப்பை முனீஷ்காந்த் வழங்கியுள்ளார். அவரது செயலால் அடிக்கடி எரிச்சலடையும் சிறை காவலராக வரும் சுபாஷ் செல்வம், திருடனை பிடிக்க முடியாத விரக்தியில் புலம்புவது யதார்த்தம்.

அவரது காதல் எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கிறது. மற்றும் ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா, சித்திரசேனன் என்று, திறமையான நடிகர்கள் அனைவரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். சிறையை நேரடியாக பார்த்த அனுபவத்தை ஒளிப்பதிவு வழங்கியுள்ளது. பின்னணி இசை ஒரேமாதிரி இருக்கிறது. அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ள இத்தொடர், தமிழ் மற்றும் மலையாள ஜீ5 ஓடிடி தளங்களில் இன்று முதல் ஒளிபரப்பாகிறது. மெதுவாக நகரும் காட்சிகள் பொறுமையை சோதித்தாலும், நேர்த்தியான கதை சொல்லும் பாணி அதை மறக்க வைக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லரில் இது ஒரு புதுவகை.

Tags : Khaki ,Munishkant ,Subhash Selvam ,
× RELATED சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் அந்தரன்