×

படத் தலைப்பு வெளியானது: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், அட்லி இணையும் ராக்கா

சென்னை: சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் பான் வேர்ல்ட் படத்தின் தலைப்பு ‘ராக்கா’ என வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கும் இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘ஏஏ 22 ஏ6’ (அல்லு அர்ஜுனின் 22வது படம், அட்லீயின் 6வது படம்) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இது பான் வேர்ல்ட் படமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதில், ‘ராக்கா’ என்ற தலைப்புடன் பாதி மிருக தோற்றத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் தலைப்பும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அட்லி தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார்.

ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அட்லீ கூறியதாவது: “ராக்கா” சாதாரணமான ஒரு படம் இல்லை. இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான் என்றார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியதாவது: ‘‘ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும் இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.” இந்த படம் சன் பிக்சர்ஸ், அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில் உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.

Tags : Sun Pictures ,Allu Arjun ,Atlee ,Rakka ,Chennai ,Sun TV Network ,Kalanithi Maran ,Sai Abhayankar ,
× RELATED ரூ.30 கோடியில் வீடு வாங்கிய பாடகி