படவேடு ரேணுகாம்பாள் கோயில் வளாகத்தில் துர்நாற்றம் வீசும் கழிவுகள்: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கண்ணமங்கலம்: படவேடு ரேணுகாம்பாள் கோயில் வளாகத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகள் வீசப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் 7 வாரம் தொடர்ந்து  நடைபெறும் ஆடி வெள்ளி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில்களில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. மற்ற நாட்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசும், ரேணுகாம்பாள் கோயில் நிர்வாகமும் தெளிவாக விளம்பரம் செய்துள்ளது. இருந்தும் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தவாறு உள்ளார்கள். அவர்கள் கோயிலுக்கு வெளியே பொங்கலிடுதல், ெமாட்டையடித்தல், கோழி அறுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி செல்கின்றனர்.அப்போது, கச்சேரி மேடை மைதானத்தில் பக்தர்கள் மொட்டை அடிக்கின்றனர். இதனால் மைதானம் முழுவதும் பராமரிப்பு இல்லாமல் தலைமுடிகளால் நிரம்பி உள்ளது. அந்த தலைமுடிகள் காற்றில் பறந்து அருகில் உள்ள குடிநீர் கிணறு, அரசு தொடக்கப் பள்ளி, லிங்காபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிரம்பி கிடக்கிறது. மேலும், கோழி அறுப்பவர்களும், கோழிக்கடை வைத்திருப்பவர்களும் திருவிழா பஸ் நிலையம் அருகே ஆற்றங்கரை திறந்த வெளியில் கோழி இறகுகள் மற்றும் கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதி இறைச்சி கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதனால் துர்நாற்றம் வீசி கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கோழி இறைச்சி கழிவுகளை பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஆர்டிஓ உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.எனவே, படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகே ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post படவேடு ரேணுகாம்பாள் கோயில் வளாகத்தில் துர்நாற்றம் வீசும் கழிவுகள்: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: