நடிகை வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் படம், `சரஸ்வதி’. இதில் வரலட்சுமி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் நடித்துள்ளனர். சமீபகாலமாக படத்தின் தலைப்புகளில் கடவுளின் பெயர்கள் இருந்தால், அப்படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி சென்சார் போர்டு அறிவுறுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி சுஹாஸ் நடிப்பில் வெளியான `Hey Balwanth’ படத்துக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பெயர், `Hey Bhagawan’. இப்பெயரை மாற்ற வேண்டும் என்று சென்சார் போர்டு நெருக்கடி கொடுத்தது.
கடந்த ஆண்டு மலையாளத்தில் அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி நடித்த ’Janaki vs State of Kerala’ என்ற படத்தின் பெயரில், ’ஜானகி’ என்பது கடவுள் சீதா தேவியை குறிப்பது போலிருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தில் ’ஜானகி’ என்ற பெயர் கொண்ட ஹீரோயின் கேரக்டர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். எனவே, படத்தில் இரண்டு காட்சிகளில் ’ஜானகி’ என்ற பெயரை மியூட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கடைசியில் படத்தின் பெயர் `JSK: Janaki V v/s State of Kerala’ என்று மாற்றப்பட்டது.
தற்போது வரலட்சுமி இயக்கியுள்ள `சரஸ்வதி’ என்ற படத்தின் தலைப்பில், ’சரஸ்வதி’ என்பது கடவுள் சரஸ்வதி தேவியை குறிப்பது போலிருக்கிறது என்று சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது `எஸ்.சரஸ்வதி’ என்று பெயரை மாற்றி படக்குழு சான்றிதழ் பெற்றுள்ளது.
