மீனாட்சி கோயில் ஆவணி மூல திருவிழாவில் மாணிக்கம் விற்ற லீலை

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக ஆவணி மூலத்திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்கள் இடம் பெறும். விழா ஆக.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று காலை 9 மணியளவில் கோயில் வளாகத்திலேயே பக்தர்களின்றி மாணிக்கம் விற்ற லீலை திருவிளையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது.இதுகுறித்து கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘வீரபாண்டிய மன்னன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது. ஒரு சமயம் அவர் வேட்டைக்கு சென்ற போது புலியால் கொல்லப்பட்டார். அப்போது அரசரது காமக்கிழத்தியரின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணி மகுடத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். இளவரசனுக்கு முடிசூட்டலாம் என அமைச்சர்கள் முடிவு செய்தனர். மணிமகுடம் முதலானவை களவு போனதை அறிந்து சுந்தரேஸ்வரரிடம் முறையிட எண்ணி கோயிலுக்கு சென்றனர். அப்போது சுந்தரேஸ்வரர் ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி புதிய மணிமகுடம் செய்ய விலையுயர்ந்த நவமணிகளை வழங்கினார். மேலும், அம்மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் போன்ற செய்திகளையும் கூறினார். புதிய மகுடத்தை சூட்டி இளவரசரை அபிஷேகப்பாண்டியன் என அழையுங்கள் எனக்கூறி மறைந்தார். கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணி மகுடமும் மீண்டும் கிடைக்கப் பெற்றது. அபிஷேகப் பாண்டியனும் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான். இந்த திருவிளையாடலே இவ்விழாவில் நினைவுறுத்தப்படுகிறது’ என்றனர்.இரவு 7 மணிக்கு அம்மன் காமதேனு வாகனத்திலும், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் எழுந்தருளி வளாகத்தில் வலம் வந்தனர். இன்று தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடக்கிறது….

The post மீனாட்சி கோயில் ஆவணி மூல திருவிழாவில் மாணிக்கம் விற்ற லீலை appeared first on Dinakaran.

Related Stories: