மிரட்டும் புவி வெப்பம்…

உலகின் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு (ஐபிசிசி) எச்சரித்துள்ளது. புவி வெப்பத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் பெரும் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதா என்ற சந்தேகத்தை ஐபிசிசி வெளியிட்டுள்ள அறிக்கை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், தாழ்வான நிலப்பகுதிகள் பல கடலுக்குள் மூழ்கும் என்ற ஐபிசிசியின் அறிவிப்பில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் இருப்பது தான் காரணம்.வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் வரும் ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு மீட்டர் அளவுக்கு உயரும். அதாவது 6 அடி அளவுக்கு கடல் மட்டம் உயரும். அப்படி உயர்ந்தால் தாழ்வான பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்பது தான் ஐபிசிசி அளித்த தகவல். இந்த அறிவிப்பைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், கடந்த 1901ம் ஆண்டு முதல் 1971 வரையிலான ஆண்டுகளில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது சமீபத்திய கடல் மட்டத்தின் உயரம் சுமார் மும்மடங்கு உயர்ந்துள்ளது.ஐபிசிசியின் அறிக்கையை வைத்து உலகில் உள்ள கடலோரப் பகுதிகள், எந்த ஆண்டில், எந்த அளவுக்கு மூழ்கும் என அமெரிக்காவின் நாசா தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின்  தூத்துக்குடி பகுதியில் கடல் மட்டம் 2030ம் ஆண்டு 70 மில்லி மீட்டரும், 2050ம் ஆண்டு 170 மில்லி மீட்டரும், 2100ல் 59 சென்டி மீட்டர் அளவுக்கும் உயரும் என்ற அதிர்ச்சி செய்தியை தந்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை, 2030ம் ஆண்டு 70 மில்லி மீட்டர், 2050ம் ஆண்டில் 170 மில்லி மீட்டர், 2100ல் 57 சென்டி மீட்டர், 2150ம் ஆண்டில் 1.03 மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெப்ப அலைகள் ஏற்படுவதோடு, அதிக மழை மட்டுமின்றி வறட்சியும் ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது. ஐபிசிசியின் அறிக்கையால் பல நாடுகள் கவலையடைந்துள்ளன. `இது மனித குலத்திற்கான அபாயக்குறியீடு’ என ஐ.நா.வின் பொதுச்செயலாளர்  அந்தோனியா குத்தேரஸ் கூறியுள்ளார். உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாகவும், 2006ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங்கடல் மட்டம் உயர்ந்துள்ளது என்றும் வெப்ப மண்டல விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்ற அளவை குறைக்கும் முயற்சிகளை கடுமையாக பின்பற்றினால் மட்டுமே மக்கள் தப்பிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் பெருமளவு பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இந்திய மக்களுக்கு, காலநிலை மாற்றம் என்ற அடுத்தக்கட்ட மிரட்டல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவை தடுக்க உலக நாடுகளோடு ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்க வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது….

The post மிரட்டும் புவி வெப்பம்… appeared first on Dinakaran.

Related Stories: