ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்பிரமணியம் சிவா, தலைவாசல் விஜய் நடித்துள்ள படம், ‘ஃபோர்த் ஃப்ளோர்’. முன்னதாக ‘நெடுஞ்சாலை’, ‘ரெட்டச்சுழி’, ‘மாயா’ ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் தனக்கு இப்படம் அமையும் என்று ஆரி அர்ஜூனன் சொன்னார். ‘மார்கன்’, ‘மார்க்’ ஆகிய படங்களில் நடித்த தீப்ஷிகா இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். ‘தீர்க்கதரிசி’ படத்தை தொடர்ந்து எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ளார். டிரைலரை விஜய் சேதுபதி, ஆர்யா, பா.ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் வெளியிட்டனர். ‘ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்தி ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், முகம் சுளிக்க வைக்காத காட்சிகளுடன், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கும்’ என்று ஆரி அர்ஜூனன் தெரிவித்தார். ‘சில பிரச்னைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும்.
ஆனால், நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை படம் சொல்லும்’ என்று எல்.ஆர்.சுந்தரபாண்டி தெரிவித்தார். தரண் குமார் இசை அமைக்க, ஜே.லஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சூரியபிரகாஷ் நிர்வாக தயாரிப்பு பொறுப்பேற்க, சுரேஷ் கல்லேரி அரங்கம் அமைத்துள்ளார். செவன்த் ஸ்டுடியோ சார்பில் கே.கண்ணன் படத்தை வெளியிடுகிறார்.
