மும்பை: இந்தியில் ‘யே ஹை மொஹபதின்’ என்ற டி.வி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ருஹானிகா தவான், தற்போது கல்லூரியில் படிக்கிறார். பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவர், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து தனது வீட்டுக்கு டாக்சியில் பயணித்தபோது, டிரைவர் வழக்கமான பாதையை விட்டுவிட்டு, வேறு பாதையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். கூகுள் ஜிபிஎஸ் வரைபடத்தில் காட்டும் வழியில் செல்லும்படி ருஹானிகா தவான் பலமுறை சொல்லியும் டிரைவர் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் பயந்த ருஹானிகா தவான், உடனே காரை நிறுத்தும்படி கத்தினார். ஆனால், காரை நிறுத்த மறுத்த டிரைவர், மோசமான வார்த்தைகளால் அவரை திட்டினார்.
நிலமை மோசமடைந்த உணர்ந்த ருஹானிகா தவான், பிறகு துணிச்சலுடன் சத்தம் போட்டு காரை நிறுத்தினார். பாதிவழியிலேயே இறங்கிய அவர், மெட்ரோ ரயில் மூலம் வீடு திரும்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாடகை காரில் எனக்கு நேர்ந்த சம்பவம் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. வாடகை கார் நிறுவனங்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.
